-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Sunday, 9 August 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை


பெங்களூரில் கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி, திறந்துவைத்தார்.

Monday, 6 July 2009

எழுத்தாளர் புதுவை நாகரத்தினம் கிருஷ்ணா


நாகரத்தினம் கிருஷ்ணா -

படைப்பு துறை: கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், பெருங்கதைகள்

கவிதைகள்: 1.அழுவதும் சுகமே
2.-பேசாதிரு மனமே

கட்டுரைகள்: 1.பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன்
2.சிமொன் தெ பொவ்வா

மொழிபெயர்ப்புகள்: 1.போர் அறிவித்தாகிவிட்டது (நவீன பிரெஞ்சு சிறுகதைகள்)
2.காதலன்- மார்கரித் துராஸ்
3. வணக்கம் துயரமே - பிரான்சுவாஸ் சகான்

சிறுகதைகள்: 1. கனவு மெய்ப்பட வேண்டும்
2. நந்த குமாரா நந்த குமாரா


பெருங்கதைகள்: 1. நீலக்கடல்
2. மாத்தா ஹரி

சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா, புதுச்சேரியில் வருவாய்த் துறையில் பணியிலிருந்து விடுபட்டு, கடந்த இருபது ஆண்டுகளாக பிரான்சு நாட்டின் வடகிழக்கு நகரமான Strasbourgல் இருப்பிடம், தொழில் வாணிபம்.

ருக்குமணியின் சபதம் என்ற சிறுகதைக்கு அமுதரபி- அப்புசாமி அறக்கட்டளை இணைந்து நடத்திய சிறுகதைபோட்டியில் பரிசு பெற்றதும், சுஜாதாவை தேர்வுக்குழுவின் தலைவராகக்கொண்டு திண்ணை நடத்திய அறிவியல் புனகதைகள் போட்டியின் முடிவில் வெளிவந்த 'எதிர்காலம் என்ற ஒன்று' என்ற தொகுப்பில் இரு கதைகள் இடம்பெற்றிருப்பதும். முதல் நாவலான நீலக்கடல் தமிழ்நாடு அரசின் சிறந்த நாவலுக்கான பரிசை(2005) ஈட்டியிருப்பதும் உபரி தகவல்கள்.

கடந்த காலங்களில் குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன், அமுத சுரபி, கல்கி போன்ற வெகுசன இதழ்களிலும் கடந்த சில ஆண்டுகளாக அம்ருத்யா, உயிரெழுத்து, படித்துறை, அணங்கு, யுகமாயினி, காலச்சுவடு, வார்த்தை போன்ற தீவிர இலக்கிய மாத இதழ்களிலும், திண்ணை, உயிரோசை, போன்ற இணைய இதழ்களிலும் எழுதிவருகிறார்.

நீலக்கடல் மதிப்புரை
-

நீலக்கடல்

- ரெ கார்த்திகேசு -
(முனைவர் திரு. ரெ.கார்த்திகே தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட தகுந்தவர். மலேசிய பல்கலை கழகத்தில் தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை தலைவராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர்.)


2005இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை. தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்
பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார். அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் •போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார். முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையான பெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.
ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.


புதுச்சேரி வட்டாரம்- வரலாறு சார்ந்த நாவல்கள்: 'நீலக்கடல்' குறிப்பாக...

-தேவமைந்தன்.

( தேவமைந்தன் ஒரு குறிப்பு:- தேவமைந்தனின் இயற்பெயர் அ. பசுபதி. 11-03-1948ல் கோவையில் பிறந்த இவர், இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தன் 52-ஆம் அகவையில் விருப்ப ஓய்வு பெற்றவர்.


1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன் முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம்.முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன.1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப் பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே 'இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் 'நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்' (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்
டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது.

மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர்
முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் 'புதுவை வரலாறும் பண்பாடும்' 'தமிழகம் புதுவை வரலாறும்
பண்பாடும்' போன்ற நூல்களில் விரிவாக அறிந்துகொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள்.

இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் 'புதுவைக் கலைமகள்' என்ற 'மாத
சஞ்சிகை' நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி,
வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள்
நடத்தப்பட்டு வந்தன. 1916ஆம் ஆண்டில், 'புதுவைக் கலைமக'ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், 'ரமணி' என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு
'குணாகுணவாராய்ச்சி'' (புதுவைக் கலைமகள்--[1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும்.
சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் 'ரமணி' போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு
முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார்.

"உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசாசாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின்
நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேசநிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள
கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்" என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம்
எழுதினார். இந்த அடிப்படையிலேயே - தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில்
நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!

நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலான
வற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு 'Les Tamouls A L'lle Maurice - Ramoo Sooria Moorthy,' 'Les Indienes A L'lle de France, ' 'A Lougnon - (Correspondance du Conseil Superieur de Boubob
et de la Compagne des Indes)' முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய 'ஆண்களும் பெண்களும்' (1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப் பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு 'பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்' என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார்.

"என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப்
பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சிலபிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக் கின்றன என்பது மெய்தான்!" என்று பிரபஞ்சன் மொழிவது 'எழுத்தாளர் தர்ம'த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து 'வைகறை' என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய 'எழுத்தாளர் தர்மம்' என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) "எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு
வந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை" என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.

இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கட'ல்
(திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு
[தெமி 1x8] பக்கங்கள் நிரம்பிய நாவல் - முன்னுரைகள் நீங்கலாக...) அந்தப் போலி
வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் 'மாத்தா ஹரி'' இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த 'சொல்தா வாழ்க்கை'யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316)

பிரபஞ்சனின் 'மகாநதி'' (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி - விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன்,
தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல்.பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப்
போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை - என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது..

பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற நாவல் 'மானுடம் வெல்லும்' என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன்.(மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) 'வானம் வசப்படும்,' ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு - சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது.

புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் 'வாழ்க்கை ஒரு விசாரணை' நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் 'சிதறல்கள்(1990)' நாவலில் காணமுடியும். சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். பாவண்ணனின் 'ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),' மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும். பாவண்ணன் படைத்த 'இது வாழ்க்கை அல்ல(1988)' என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப் பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன் ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.

புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் 'நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14) "ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்" என்று சொல்லும் பிரபஞ்சன்('உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்': நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி 'நீலக்கட'லில் ஐக்கியமாகின்றன.பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது

'நீலக்கடல்.' பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து 'டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் 'அன்னத் தீவு' என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் 'மொரீஸ்' என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் 'பிரஞ்சுத் தீவு' என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். ("பெயரில் என்ன இருக்கிறது!" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.) ஆம். "பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது."(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம்.

தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் 'கருமாறி 'ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள்.

தாந்திரிக நிலையில் "வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி"(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் - கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் - தன் மனத்துக்குகந்த பெர்னார் •போந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் 'கருமாறிப் பாய்வ'தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல - தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) 'நீலக்கடல்' நாவலில்தான் பார்க்க முடிகிறது.

சரி. 'நீலக்கட'லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். "சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis - லூயி துறைமுகம்). கடல் - தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் •போந்தேனின் எள்ளுப் பாட்டன்.)

பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் -தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது.

யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். "தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்."(பக்.31-32) தன் வேரினைத் தேடிக்களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் - மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள்தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான்."கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர். ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய "புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது" என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது. (மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6: புதுச்சேரி. qu.in 'மனோரமா இயர்புக்') 'நீலக்கடல்' குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.

இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). 'உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.' அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை 'The Serpent Of Paradise' என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார்.

நீட்ஷே, "சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?" என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். 'தாந்திரிக மைதுனம்' என்ற சடங்கைப் பற்றி (Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது - 'நீலக்கட'லில் அலை - 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான்.
" The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini"(op.cit.p.91)
என்பது செர்ரனோவின் பதிவு.

வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது. 'நீலக்கட'லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் 'சொர்க்கத்தின் சர்ப்ப'த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. 'நீலக்கட'லில் அமானுஷ்யமானதாக வருவது, 'சொர்க்கத்தின் சர்ப்பத்'தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த •ப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

'நீலக்கடல்' நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் "பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு... மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்" என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் - தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் •போந்த்தென் தன் நிகழ்பிறவியில் - தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய 'காஞ்சி மனை'யில், அதன் நிர்வாகி'யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.

பின்தொடரும் 'அடங்கல்' - மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான 'தினா' புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. 'உயிர்ச்சேதம்' பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறைமெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520)

"பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது"(ப.519) என்ற வரிசையில் பெர்னார் •போந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும்.

இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி - கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் 'பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி''யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் •போந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் - சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபே•ப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108)

நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. "நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக"(ப.519) என்பது ஒரு சான்று.

உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?"

அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) 'உளவியலுக்கான சார்பியல்' (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். 'The World According To Garp' என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது.

மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. "தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன்
பணி செய்து கிடப்பதே." இதில் 'தன்' என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது... 'நீலக்கடல்' நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? "எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்"(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு?

இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக(அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் 'சாமர்த்தியம்.' எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.

'நீலக்கட'லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் 'சொஸ்த லிகித'மான 'தினசரிப்படி சேதிக் குறிப்'பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் 'Narrative' என்பதை மனத்துள் கொண்டு 'நவிலல்' என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். 'நீலக்கட'லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் "இந்தப்படிக்குப் படித்துப்போட" முடியாது.

இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus...pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற 'Ars Poetica' என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 'Purple Patch' என்பது. "It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose -- especially a descriptive passage -- stand out from its context"(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று 'நீலக்கட'லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.

'நீலக்கட'லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் "நண்பனே!" என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் - கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் - கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது.

புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.

("ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?").. "மிசியே! போன்சூருங்க!" என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; "முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு'ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு'ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?" (காரைக்காலில் "என்ன புள்ளா!"வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், "தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி!" என்றும் தமிழோசையை "நாங்க படிச்சாச்சு..நீங்க..?" என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.

புலம்பெயர்ந்தோர் நாவல்கள்; தமிழர் வாழ் நிலையை முன்வைத்து....
- ந.முருகேசு பாண்டியன்


மனித இனம் காலந்தோறும் உணவு, தங்குமிடம், இயற்கை சீற்றம் காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் தங்கியிருத்தல் இயற்கைக்கு முரணானது. சமூகவளர்ச்சி என்பது புலம்பெயர்தல் மூலமாகவே நடந்தேறியுள்ளது. தமிழர்கள் இன்று வரையிலும் பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் முகமதியரின் ஆளுகைக்குட்பட்ட தமிழகம் தொடர்ந்து நாயக்கர், மராட்டியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், எனப் பிறமொழியினரின் ஆட்சியில் பொருளியல் சீரழிவுக்குள்ளானது. வைதீக இந்து சமயம் அதிகாரத்துடன் சமரசம் செய்து கொண்டு தனது மேலாண்மையைத் தக்க வைத்துக்கொண்டது. சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பால் சமத்துவமின்மை, உழவுத்தொழில் நசிவு காரணமாக விளிம்புநிலையினர் வாழ வழியற்றுத் தவித்தனர். வறுமையினால் அடித்தட்டு மக்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டனர். இத்தகு சூழலில் பொருளாதாரச் சுரண்டலையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே அனுபவிக்க விரும்பும் ஐரோப்பிய நாடுகள் மனித வளம் மலிவாகக்கிடைக்கும் நாடுகளிலிலிருந்து மனிதர்களைப் பிற குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன.

கி.பி. 18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ வழியற்றோர் தலித்துகள். உடைமை எதுவுமற்ற உடல் உழைப்பவர்கள் புலம் பெயர்ந்தால் வளமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையில் கப்பலேறினர். சொந்த மண்ணில், சாதியரீதியில் தீண்டத்தகாதவராகி, நாயிலும் கேவலமாக வாழ்வதைவிட அந்நிய நாட்டில் தன்மானத்துடன் வாழலாம் எனக் கூட்டம் கூட்டமாகப் பயணமாயினர். மொரிஷியஸ், •பிஜி, நியூசினி, டச்சுக்கயானா, குரினாம், காங்கோ, தென்னாபிரிக்கா, மடகஸ்கார், பர்மா, மலேயா, இலங்கை, போன்ற நாடுகளுக்குப் பல நாட்களுக்கு கடலில் பயணம் செய்து தரை இறங்கிய தமிழரின் வாழ்நிலை அங்கும் கடினமாக இருந்தது. காடுகளை அழித்தல், சாலைகள் போடுதல், வேளாண்மை செய்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில் கடுமையாக உழைத்தனர். இவ்வாறு கொத்தடிமைகளாகப் போன தமிழர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தமிழகத்திற்குத் திரும்பவே இல்லை. அவர்களுடைய வாரிசுகள் தமிழைப் பேச அறியாமல் தமிழ் அடையாளங்களுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் ஈழத்துத் தமிழர்களின் புலம் பெயர்வு தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரமும் இராணுவத் தாக்குதல்களும் இயக்கங்களின் ஆயுதமேந்திய போராட்டங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய பெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இன்று ஈழத் தமிழரில் நான்கில் ஒருவர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

1990க்குப் பின்னர் தகவல்தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான வளர்ச்சி, வேலைவாய்ப்புக் காரணமாக உயர்கல்வி கற்ற தமிழர்கள் அமெரிக்கா, அரேபியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்நிலை இலட்சியமாகக் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் புலம் பெயர்ந்தோர் புதிய நாடுகளில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். என்றாவது ஒருநாள் தாயகம் திரும்புவோம் என்ற மனநிலையுடன் வாழ்ந்த தலைமுறையினருக்கும் புதிய சூழலில் இயல்பாக ஒத்திசைந்து வாழும் இளம் தலைமுறையினருக்குமான முரண் முக்கியமானது. மேலும், புகலிடத்தில் சுய அடையாளம் என்பது தாய்நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையில் அடையாளச் சிக்கல் தோன்றுகிறது. புலம் பெயர்தல் என்பது தாயகத்தை மறுவிளக்கம் செய்ய அடிப்படையாக விளங்குகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இயல்பாக பொதிந்துள்ள இழந்தது குறித்த ஏக்கம். புலம் பெயரும் இடத்தில் ஒப்பீட்டு மனநிலையை உருவாக்குகின்றது. நடப்பில் தான் வாழ நேர்ந்திடும் சமுதாயத்துடனும் பண்பாட்டுச் சூழலுடனும் ஒருவருக்குள்ள உறவுக் கூறுகளை ஆராய்வதன் மூலம் கடந்த காலத்தினுக்கும் நிகழ்காலத்தினுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுகின்றது. ஒப்பாக்கல் மூலம் எல்லாவற்றையும் பூர்வீக நாடு. புகலிட நாடு என்ற முரணில் பண்பாட்டு வேறுபாடுகளை அடையாளப்படுத்துதல் புலம் பெயர்ந்த சூழலில் புகலிட நாட்டில் எதிர் கொண்ட புதிய பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புலம் பெயர்ந்த நாட்டுச் சூழல் ஒத்துப் போகாத மன நிலையும் பூர்வீக நாடு குறித்த ஏக்க மன நிலையும் படைப்பாளரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவுகள், பாலுறவு, ஆண் பெண் உறவு, தட்பவெப்பநிலை, மொழி, உணவு போன்றவற்றில் ஏற்படும் புதிய அனுபவங்கள் சமூக மதிப்பீட்டில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

புலம் பெயர்ந்தோர் தமது அனுபவங்களைப் பதிவாக்கிடுதல் புலம் பெயர்ந்தோர் பற்றிய நாவல்களைத் தொடுத்து எழுதுதல் எனப் புலம் பெயர்ந்தோர் பற்றிய படைப்புகளை பகுக்கலாம். புலம் பெயர்ந்த தமிழர்களின் பெருங்கதையாடலை விவரிக்க ஒப்பீட்டளவில் நாவல் வடிவம் பொருத்தமானது. ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தேர்ந்தெடுத்துப் புனைவுடன் விவரிக்கும் மொழியானது வாசிப்பில் நெருக்கத்தைத் தரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அவல வாழ்க்கை பொதுப் புத்தியில் பதிவாகியுள்ளது. பிஜித் தீவினில் கரும்புத் தோட்டத்தில் தமிழர் படும் துயரம் பற்றிய பாரதியாரின் கவிதை வரிகளும் இலங்கைக்குச் தேயிலை தோட்ட வேலைக்குச் சென்றவர்களின் அவல வாழ்க்கையைத் "துன்பக்கேணி' கதையில் பதிவாக்கியுள்ள புதுமைப்பித்தனின் படைப்பும் தற்செயலானவை அல்ல. அன்றைய தமிழகத்தில் நிலவிய சாதியக் கொடுமையும் வறுமையும் தான் எழுத்தறிவற்ற தமிழர்களைப் பூர்வீகக் கிராமங்களை விட்டுக் கிளம்பச் செய்ததில் முதன்மைக் காரணங்களாக விளங்கின. புலம் பெயரும் இடம் நிச்சயம் தமிழகத்தை விட மோசமாக இருக்காது என்ற நம்பிக்கையில் ஓரளவு உண்மை உள்ளது. புலம் பெயர்ந்த இடத்தில் எந்த வேலை செய்தாவது வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்ற கனவுடன் சென்ற தமிழர்கள் அங்கேயும் கஷ்டப்பட்டனர். கோவில், சடங்குகள் என்று பழமையைப் போற்றினர். வைதீக இந்து சமயம் புலம்பெயர்ந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தியது வரலாற்றின் விநோதம் தான். இத்தகு பின்புலத்தில் நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியுள்ள "நீலக்கடல்' நாவல் தமிழர் வாழ்க்கையை மறுவாசிப்புச் செய்துள்ளது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுக்குப் பிரெஞ்சுக்காரரிடம் ஒப்பந்த அடிமைகளாகவும், அடிமைகளாகவும் கொண்டு செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் துயர வாழ்க்கையை நாவல் சித்திரித்துள்ளது. ஒரு பெண்ணைச் சுற்றி சுழலும் கதை, பல நூற்றாண்டுகளைக் கடந்து புதியதான புனைவில் நீள்கின்றது. கவர்னர் துய்ப்ளே, லா போர்தொ, ஆனந்தரங்கம் பிள்ளை, கனகராய முதலி போன்ற அதிகார வர்க்கத்தினருடன் எளிய மக்களின் வாழ்க்கைக்கு நாவலில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. தமிழர்களின் குருதியில் உறைந்துள்ள அடிபணியும் குணமும், விசுவாசமும் நிலவுடைமையாளர்களான பிரெஞ்சுக்காரர் முன் மண்டியிடச் செய்கின்றன. அதிகாரத்தினுக்கு அடங்கியிருத்தலை நல்ல பண்பாகத் தமிழர் கருதுகின்றனர். காட்டை அழித்தல், கரும்பு வெட்டுதல், சாலைபோடுதல், குடியிருப்புக் கட்டுதல் போன்ற வேலைகளில் நாள் முழுக்க வியர்வை சிந்திட கடுமையாக உழைத்திடும் தமிழர்களின் ஆழ்மனத்தில் தமிழகத்திற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் நம்பிக்கை தருவதாக உள்ளது. பிரெஞ்சுக்காரர்களின் ஒடுக்குமுறையை எதிர்த்த காத்தமுத்து கொல்லப்படுகிறான்; நீலவேணி, கமலம் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர்; போல் பிரபுவைத் தமிழனான அனங்கோ வெட்டிக் கொல்கிறான்; பிரெஞ்சுப் பண்ணையாரின் மகனும் கொலை செய்யப்படுகிறான்.... மொரிஷியஸ் தீவில் மனித உடல்கள் அதிகாரத்தின் பெயரால் அத்துமீறப்படுகின்றன. வன்முறையின் வழியே நிலைபெறும் அதிகாரம், எதிர்காலக் கனவுகளுடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித மதிப்பீடுகள் அர்த்தமிழந்து போவதை நாகரத்தினம் மொரிஷியஸ் தீவை முன்வைத்துச் சொல்லியுள்ள நாவல் அழுத்தமான வரலாற்றுப் பதிவாகும்.


மலேசியாவிலுள்ள காடுகளை அழித்து, இறப்பர் மரங்களை வளர்த்து, இறப்பர் பால் சேகரிக்கும் வேலை செய்ய தமிழகத்திலிருந்து பல்லாயிரக் கணக்கில் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் புலம்பெயர்வு குறிப்பிடத்தக்கது. இன்று இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் என அழைக்கப்பெறும் பகுதிகள் கடும் வறட்சிக்குள்ளாகக்கூடியன. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை அடிக்கடி பொய்த்துவிடும். இதனால் வாழ வழியற்ற தமிழர்கள் மலேயாவிற்குப் புலம்பெயர்ந்தனர். அதேவேளையில் வட்டித் தொழில் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் மலேசியாவுக்குச் சென்றனர். சீனர்களுக்கும் மலேசியருக்கும் வட்டிக்குப் பணம் தந்து பொருளீட்டிய செட்டியார்களும், அவர்களுடைய கடைகளில் வேலை செய்ய வேறு சாதியினரும் பொருளியல் ரீதியில் வளமானவர்கள். மலையகக் காடுகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த தமிழர்கள் கடுமையான சுரண்டலுக்குள்ளாயினர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினர். 1960 களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக மலேசியாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினாலும், இன்று வரையிலும் மலேசியா மக்கள் தொகையில் 7% தமிழர்கள். மலேசியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பின்வரும் நாவல்கள் பதிவாக்கியுள்ளன; கடலுக்கு அப்பால் (ப. சிங்காரம்), புயலிலே ஒரு தோணி (ப. சிங்காரம்), பால்மரக் காட்டினிலே (அகிலன்), சயாம் மரண ரயில் (ஆர். சண்முகம்), இவைதவிர லங்கா நதிக்கரையில் (ரங்கசாமி) செம்மண்ணில் நீலமலர்கள் (குமரன்) இலட்சியப் பாதை (இளம் வழுதி) ஆகிய நாவல்களும் புலம்பெயர் வாழ்வைச் சித்தரித்துள்ளன.

மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால் சமத்துவமின்மை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை மரபு ரீதியில் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர். அது தமிழ் அடையாளத்தைப் போற்றுவது என்று நம்பினர். இந்நிலையில், இரண்டாம் உலகப் போர் தமிழர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அடிமைத்தனமும் விசுவாசமும் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்த தமிழனின் பொதுப்பிம்பம் சிதைந்தது. வட்டித் தொழில் பொண்டுகத்தனமானது. வட்டி வசூலிக்கப்போன இடத்தில் யாராவது அடித்தால் வெளியே சொல்லக்கூடாது என்ற நியதியைக் கொண்டிருந்த வட்டித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் நேதாஜியின் ஆளுமையினால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ.) சேர்ந்து இராணுவப் பயிற்சி பெறுகின்றனர். இராணுவத் தாக்குதல்கள், போருக்குப் பிந்தைய வாழ்நிலை என விரியும் ப. சிங்காரத்தின் இரு நாவல்களிலும் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்தும் மாற்றங்கள் நுட்பமாகப் பதிவாகியுள்ளன.
------------------------------------------------------------------

மாத்தாஹரி குறித்த மதிப்புரைகள்

மாத்தா ஹரி
(புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை)

- கி. அ. சச்சிதானந்தம்

ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ' மாத்தா ஹரி - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.’

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி - 'புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் 'இட்டுக் கட்டியது’, 'கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான 'மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. 'ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் - இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். 'எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். 'நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் 'மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை 'பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை... அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? 'அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59).

தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. 'பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், 'அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் 'ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? 'சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்... மாத்தா ஹரி... ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? "தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி... பவானி... பவானி.” "உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது 'கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

'குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.'குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்... ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. 'பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) 'நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். பிறகு எம்.ஜி.ஆர் என்பான். சிவாஜி என்பான். வேறு ஒரு மசுறும் தெரியாது. விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.

அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்.....
- வே.சபாநாயகம் -

பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும், பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் - வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் - 'மார்த்தாஹரி' அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.

கதையின் மையம் - பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் - எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் - மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன
மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் 'மார்த்தஹரி சமயக்குழு' அவளை மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.

பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை - பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

- இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் 'அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக' அமைந்திருக்கிறது எனலாம்.

நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் - ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே - அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.

பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் 'கல்கி'
யின் 'சோலைமலை இளவரசி' நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.

நடையில் 'சுஜதா'வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன் ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் - இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக் கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் - மழை பற்றிய வருணனையில் - எழுதப்பட்டிருக்கும் வரிகளும், 'உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்" என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்

பாவண்ணன்

உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார். தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நாவலாசிரியராகத் தொடங்கிய அவருடைய இலக்கிய பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவ முகத்தை உருவாக்கும் முயற்சியாக விரிவடைந்தது. இருத்தலியல், உளவியல், மார்க்ஸியம் என எல்லா தளங்களிலும் நிலவும் பெண்கருத்தியலைத் தொகுத்து சமகாலத்திய சிக்கல்களுடன் அவை பொருந்தியும் விலகியும் செல்கிற தடயங்களை அடையாளம் கண்டு முன் வைத்தார் அவர். அவருடைய 'இரண்டாம் இனம்' என்னும் நூல் உலக அளவில் வாசிக்கபட்ட முக்கிய புத்தகம். கடந்த ஆண்டு கன்னடத்தில் அந்த நூல் மொழி பெயர்க்கப்பட்டு விரிவான அளவில் விவாத அரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. முழு நூலாக இல்லாவிட்டாலும் அதன் சிந்தனைப்பாதையைப் அடையாளம் காட்டும் விதமாக இச்சிறு நூலை நம் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்தளித்திருக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு தமிழ்ச் சிந்தனை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. தத்துவத்துக்கே உரிய தர்க்க ஒழுங்குள்ள வாத விவாதங்களில் லயத்தையும் சாரத்தையும் உயிர்ப்புடன் தமிழில் தருவதற்கு அவருடைய பிரெஞ்சு ஞானமும் தமிழ்புலமையும் உதவியிருக்கிறது.

ஓர் அறிமுக நூலில் நாம் எதிர்பார்க்கிற எல்லா அம்சங்களும் இந்த நூலில் உள்ளன. தொடக்கத்தில் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சுருக்கமான் அறிமுகம் இடம்பெறுகிறது. பிறகு அவருடன் வாழ்நாள் முழுதும் நெருக்கமாகப் பழகிய ழான் போல் சார்த்ரு; நெல்சன் அல்கிரென் ஆகிய இருவருடனானா வாழ்க்கைச் சுருக்கம் இடம் பெறுகிறது. பொவ்வாரின் படைப்புலகம், அரசியல், வாழ்க்கை என மூன்று தளங்களிலும் இத்தொடர்புகளால் நிகழ்ந்த தாக்கங்களும் சிறிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து 'இரண்டாம் இனம்' நூலின் இரண்டு பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. பிறகு இந்த நூலுக்கு பொவ்வார் எழுதிய உயிரோட்டம் மிகுந்த இருபது பக்க முன்னுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியாக பொவாருடைய நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

உயிரியலாலும் உளவியலாலும் பெண் என்னும் கருதாக்கம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை எந்த ஒரு சிறு அம்சத்தையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் தொகுத்து, ஒவ்வொன்றும் சுட்டுகிற உட்பொருளையும் அதன் நீட்சியையும் இணைத்து, தர்க்கங்களின் அடிப்படையில் ஒரு முடிவை நிறுவுகிறார் பொவ்வார். எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம். நுரையீரல், மூச்சுக்குழல், குரல்வளை மூன்றுமே அளவில் ஆணைக்காட்டிலும் பெண்ணுக்குச் சிறியவையாக இயற்கையிலேயே அமைந்திருக்கிற பேதத்தை முதலில் சுட்டிக்காட்டுகிறார் பொவ்வார். பெண்ணின் குரல் மாறுபட்டு மென்மையாக ஒலிப்பதற்குக் காரணம் குரல்வளை அமைப்பில் உள்ள பேதமே என்று அவர் முன்வைக்கும் முடிவைப் படித்த கணத்தில் சீவாளியின் அளவுக்குத் தகுந்தபடி மாற்றமடையும் நாதஸ்வரத்தின் ஓசையையும் துளைகளின் அளவுக்குத் தகுந்தபடி மாற்றமடையும் புல்லாங்குழலின் ஓசையையும் நினைத்துக்கொள்கிறது மனம். அதேபோல பெண்களின் கன்னம் சிவப்பிறகு காரணம் குறைவான ரத்த புரதத்தால் நேரும் இரத்த சோகை என்றும் நிறுவுகிறார் பொவ்வார். இப்படி உயிரியல் கட்டமைப்பில் உள்ள பல விஷயங்களை ஒவ்வொன்றாக அடுக்கி அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் மனித மனபோக்குக்கு நனவிலி மனநிலையைக் காரணமாகச் சொல்கிற பிராய்டின் உளவியல் பார்வையை ஏற்க மறுக்கிறார் பொவ்வார். அதற்கான மற்ற காரனங்களை தர்க்க அடிப்படையில் முன்வைக்கவும் அவர் தவறவில்லை. குறியீடுகளாகக் கனவிலி நிலையென்னும் புதிர் படைத்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. குறியீடென்பது வானிலிருந்து குதித்ததுமில்லை. பூமியிலிருந்து முளைத்ததுமில்லை. மொழியைப்போல அவ்வபோது தன்னை செறிவூட்டிக்கொண்டு வளர்ந்து, கூட்டத்தோடும் தனித்தும் வாழப்பழகிய மனிதரின் இயல்பானப் பண்பாக வடிவமைக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையிலேயே கோட்பாடுகளை அணுக வேண்டியிருப்பதால் உளப்பகுப்பாளர்களின் கருத்தியல்களில் சிலவற்றை ஏற்கவும் நிராகரிக்கவும் வேண்டியிருக்கிறதென்பதே பொவ்வாரின் பார்வை. பொருள்வாதமும் பெண்களும் என்னும் பகுதியில் பெண்களின் மீதான ஒடுக்குதலுக்கான காரணங்களாக பொருளாதார வரலாற்றில் தேடிய மார்க்ஸியச் சிந்தனையாளர் முன் வைத்த கருத்துக்களை விரிவான ஆய்வுக்குள்ளாகிறார் பொவ்வார். இவையனைத்தும் 'இரண்டாமினம்' நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதியில் வரலாறும் பழங்கதைகளும் முன் வைத்த பார்வைகளை, தனிதனிப்பகுதிகளாக வகுத்துக்கொண்டு ஆய்வை நிகழ்த்துகிறார் பொவ்வார். அவற்றுடன இன்றைய நிலைகளும் வாழ்க்கை முறைகளும் சூழல்களும் கணக்கில் எடுத்துகொள்கிறார். அவருடைய முடிவுகள் தெளிவாகவும் மறுக்க முடியாதவைகளாகவும் உள்ளன.

'இரண்டாம் இனம்' நூலுக்கு பொவ்வார் எழுதிய முன்னுரைப் பகுதியையும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார் நாகரத்தினம். அதில் 'இரண்டாம் இனம்' நூல் எழுதுவதற்கான தன் மன உந்து தலையும் சூழலையும் தெளிவாக முன் வைக்கிறார் பொவ்வார். பல இடங்களில் புராணங்களிலும் மக்களிடையே நிலவுகிற வாய்மொழி கதைகளிலும் இடம்பெற்றுள்ள பெண்களின் சித்திரங்களைக் கண்டெடுத்து அவற்றில் மறைந்துள்ள படிமத் தன்மையைக் கண்டறிய முற்படுகிறார் பொவ்வார். ஒவ்வொன்றும் மேல் தளத்தில் சுட்டுகிற கோணத்தையும் மறை தளத்தில் அடங்கியுள்ள வேறொரு கோணத்தையும் முன்வைத்தபடி வாதங்களை அடுக்கிச்செல்லும் வேகம் ஒரு சிறுகதையைப் படிப்பதற்கான அனுபவத்தை வழங்குகிறது. வரலாற்றின் தடங்களில் மானுட மனம் முன் வைத்ததையும் மறைத்துவைத்ததையும் இன்று யாரோ ஒருவர் அடையாளம் கண்டுபிடித்து அம்பலமாக்குவதைப் போன்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த முன்னுரையில் தனக்கு முன்னோடியாக பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூலென் தெ லா பார் என்பவரைப் பற்றி பொவ்வார் முன் வைத்துள்ள குறிப்புகள் மிக முக்கியமானவை. பூலென் தெ லா பாரின் கருத்தாக சொல்லப்பட்டுள்ள வரிகள் கூர்மையாக உள்ளன. பெண்களைக் குறித்து ஆண்கள் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே நமபகத்தன்மை அற்றவை. ஏனெனில் அங்கே நீதிபதி, வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள், சாட்சிகள் அனைவருமே ஆண்களாகவே இருக்கிறார்கள் என்று ஓங்கி வலிக்கிறது அவர் குரல். நான் பெண்ணாகப் பிறக்காதது தெய்வச்செயல் என்ற வாசகம் இடம் பெறும் யூதர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாகப் பிறக்க வைத்ததற்காக முதலாவதாகவும் தன்னைப் பெண்ணாக இல்லாமல் ஓர் ஆணாகப் பிறக்க வைத்தற்காக இரண்டாவதாகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிற பிளாட்டோவின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் முன்வைத்து அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் தடங்கள் போகிறபோக்கில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்கும் கணங்களில் நம் மனத்தில் புரளும் எண்ண அலைகள் ஏராளம்.

இறுதிப்பகுதியில் இடம் பெற்றுள்ள நேர்காணல் பொவாரின் ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஜெர்மானிய பத்திரிகையாளரும் பொவ்வாருடன் இணைந்து பணியாற்றியவருமான அலிஸ் ச்வார்ஸெருடைய கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மிக விரிவான அளவில் தன் விடைகளை அளிக்கிறார் பொவ்வார். வாசிப்பின் வழியாக கடந்தகாலபெண்ணின் நிலைகளை அறிந்தவராகவும் எதார்த்த வாழ்வின் சங்கடங்களை அறிந்தவர் என்கிற நிலையில் நிகழ்காலபெண்களின் நெருக்கடிகளை உணர்ந்தவராகவும் பொவ்வார் இருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்துகின்றன. பெண்களுக்கான தீர்மானிக்கப்பட்ட உலகிலிருந்து விடுபட்டு மானுட வாழ்க்கையில் தனக்குரிய பங்கை அடைய நினைக்கிற பெண்ணுக்கான நிகழ்கால துன்பங்களையும் இன்றைய பெண்களின் நிலைமைகளையும் கனிவோடும் கரிசனத்தோடும் வெளிப்படுத்தும் பொவ்வாரின் குரல் வரலாற்றைத் துளைத்து மேலெழவேண்டிய ஒன்று.

ஒரு சமூக அடையாளமாகத் திகழும் சிமொன் தெ பொவ்வாரின் சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தின் நல்ல விளவுகளை உருவாக்க முடியும். தமிழ்ச் சிந்தனை வரலாற்றில் பெண்கள் பற்றிய பார்வையைத் தொகுத்துக்கொள்ளவும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டங்களை அடையாளம் காட்டவும் தேவையான உந்துதலை இந்த மொழிபெயர்ப்பு நூல் வழங்குகிறது. விமர்சன பார்வையை உருவாக்கி வளர்த்தெடுக்க இத்தகு பயிற்சிகள் நிச்சயம் உதவும். அதற்கான விதையை இந்த மொழிபெயர்ப்பு நூல் தன்னளவில் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை.
-----------------------------------------------------------
நூல்: சிமொன் தெ பொவ்வார்.
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
விலை: ரூ.70
எனி இந்தியன் பதிப்பகம்
102. பி.எம்.Jஇ. காம்ப்ளெKஸ்
எண் 57, தெற்கு உஸ்மான் சாலை. தி. நகர்.
சென்னை-17 போன் 243292831

Monday, 22 June 2009

அரசுக் கல்லூரிகளில் இலவசக் கல்வி: துணைவேந்தர் கோரிக்கை நிராகரிப்பு

புது நிதி ஆதாரங்கள் இல்லாததால், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கும் பரிந்துரையை அரசு நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன், தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்குப் பரிந்துரை வழங்கியிருந்தார்.
"அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஏற்கனவே கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு 30 கோடி ரூபாய் கொடுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ரத்து செய்து விடலாம். 500 கோடி ரூபாய் வழங்கினால், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்து விடலாம்' என, ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை அரசு ரத்து செய்துவிட்டாலும், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி வருகின்றனர். மேலும், பல்கலை, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு செமஸ்டரின்போதும் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வுக்கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பரிந்துரை ஏற்கப்பட்டால், மாணவர் சமுதாயம் பெரிதும் பயனடையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. புதிய நிதி ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும் இப்பரிந்துரையை ஏற்க முடியாது என, அரசு தரப்பில் தெரிவித்துவிட்டதாக உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மலேசியாவில் பல ஆயிரம் தமிழர்கள் தவிப்பு !

போலி ஏஜன்ட்கள் மூலம் செல்லும் இவர்களில் பலர், சுற்றுலா விசா மூலம் அனுப்பப் படுகின்றனர். தாங்கள் எந்த விசா கொண்டு வந்தோம் என்பது கூட தெரியாததால், விசா காலம் முடிந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பணிபுரியச் செல்லும் நிறுவன ஒப்பந்தத்தின் விவரத்தையும் யாரும் பார்ப்பதில்லை. மலேசிய நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை, முழுமையாக கொடுக்காமல் சில ஏஜன்ட்கள் ஏமாற்றுகின்றனர். இதனால், மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், சிலர் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
அவர்களை, அந்நாட்டு போலீசார் பிடித்து சிறையில் அடைக்கின்றனர். இப்படி, மலேசிய சிறைகளில் 3,600 தமிழர்களும், முகாம்களில் 2,400 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தோட்டம், கடைகள், கோழிப்பண்ணை, ஒயின் ஷாப் என பல இடங்களில் வேலை செய்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கலில் மாட்டிய பெண்கள் பலர், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டில், தலை மறைவாக இருந்த வெளிநாட்டினருக்கு மலேசிய அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. பொது மன்னிப்பு வழங்கப்படுபவர்களின் விமானச் செலவு, அவர்கள் மீண்டும் தங்கிவிடாமல் இருப்பதற்கான உத்தரவாதம் மற்றும் எத்தனை பேர் தலைமறைவாக தங்கியிருக்கின்றனர் என்ற விவரம் என பல சிக்கல்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.இந்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால், பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க மலேசிய அரசு தயாராக இருப்பதாக தெரிகிறது. இத்தருணத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லும் என, மலேசிய வீதிகளில் பல தமிழர்கள் சுற்றித் திரிகின்றனர்.அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகும் தமிழர்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சகமும், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மலேசிய தமிழர்களின் நலன்கருதி, காமன்வெல்த் சமரச தீர்ப்பாயம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு அங்கு சென்று விசாரனை மேற்கொண்டது. அந்த அமைப்பின் தெற்காசிய தலைவரும், வக்கீலுமான செல்லம் பாரிமன்னன் கூறுகையில், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம், உதவிக்காக அளித்துள்ள தொலைபேசிஎண்களை ஏழு நாட்களாக தொடர்பு கொண்டும், யாரும் முறையாக பதிலளிக்க வில்லை.
மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் காந்தாவை நாங்கள் சந்தித்தபோது, "சட்ட விரோதமாக இங்கு வாழும் தமிழர்களுக்கு நாங்கள் உதவ முடியாது' என்றார். இந்த விஷயத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மிரண்டு போனதும் மீண்டு வந்ததும்!:சென்னை நந்தனத்தில் இருந்து செயல்பட்ட போலி நிறுவனம் ஒன்றின் மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட, நாகப்பட்டினம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது:பணிக்கான விசா மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 30 பேர் கொண்ட குழுவில், 90 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, நானும் போனேன்.
எங்களை அனுப்பிவிட்டு ஏஜன்ட் சென்றுவிட்டதால், மலேசியா ஏர்போர்ட்டில் எங்களை அழைத்துச் செல்ல, அங்குள்ள ஏஜன்டுக்காக காத்திருந்தோம்.பத்து நாட்கள் வரை அவர் வராததால்,மொழி தெரியாத நாட்டில் சாப்பாட்டிற்கு வழி தெரியாமல் தவித்தோம்.பிறகு வந்த ஏஜன்ட் மூலம், ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். சம்பளம், வேலை நேரம் எல்லாமே, ஏஜன்ட் சொன்னதற்கு மாறாக இருந்ததால் மிரண்டு போனேன்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவாவது சம்பாதிக்க வேண்டுமே என நினைத்து, பல இடங்களில் வேலை செய்தும் வட்டியை மட்டுமே கொடுக்க முடிந்தது. வேறு வழி இல்லாமல், ஒரு வழியாக நாட்டிற்கு மீண்டும் வந்து விட்டேன்.என்னைப் போன்று பல ஆயிரம் பேர், திரும்பி வரக்கூட பணம் இல்லாமல் அங்கு தவிக்கின்றனர்.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

Wednesday, 3 June 2009

இலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு


புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை,62மறைமலையடிகள் சாலையில் உள்ள(புதுவைப்பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு:

+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி
முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929)

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும் தமிழுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிவதில் மகிழ்கிறேன்.

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் 16.03.1929 இல் பிறந்தார்.இவர்தம் பெற்றோர் பெயர் அ.அரசு,இரா.அரங்கநாயகி. திருமுருக னாரின் இயற்பெயர் இரா.சுப்பிரமணியன் என்பதாகும்.தனித்தமிழ் ஆர்வம் ஏற்பட்ட பிறகு தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டவர்.

இவர் பண்டிதம்(1951),கருநாடக இசை-குழல் மேனிலை(1958), பிரஞ்சு மொழிப்பட்டயம் (1973),கலைமுதுவர்,கல்வியியல் முதுவர்,மொழியியல் சான்றிதழ்(1983),முனைவர்(1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர்.44 ஆண்டுகள் அரசுப்பணியாற்றிய பின்னர் ஓய்வுக்குப் பின் தமிழ் வளர்ச்சி சிறகத்தின் தனி அலுவலர் பணிபுரிந்து புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கு வேண்டிய ஆக்கப்பணிகளில் ஈடுப்பட்டவர்.

தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்னும் அமைப்பின் சிறப்புத் தலைவராகவும், புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் நிறுவுநராகவும், தெளிதமிழ் என்னும் திங்கள் ஏட்டின் சிறப்பு ஆசிரியராகவும், தமிழ்க்காவல் என்னும் இணைய இதழின் ஆசிரியராகவும் பணிபுரிபவர்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராகவும்,புதுவை அரசின் ஆட்சிமொழிச் சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினராகவும் விளங்குபவர். பல்வேறு பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குப் பழந்தமிழ்ப் பனுவல்களை ஒலி வட்டாக்கிய குழுவில் முதன்மையிடம் பெற்றவர்.

இன்றைய தமிழுக்குப் புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும்,தமிழ்நலம் கெடும் இடங்களிலில் தலையிட்டுக் கிளர்ச்சி செய்வதிலும் ஈடுபட்டு வருபவர்.

தமிழ்ப்பணிகளின் பொருட்டு இவர் பிரான்சு, செருமனி, உரோமை, மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்த பெருமைக்கு உரியவர்.என் தமிழியக்கம் என்னும் பெயரில் ஐயா உருவாக்கியுள்ள நூல்களில் இவர்தம் நாற்பதாண்டுக் கால பணிகள் பதிவாகியிள்ளன. சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம் தொடர்பிலான இவர்தம் முனைவர் பட்ட ஆய்வேடு முதன்மையானது. சிந்துப்பாவியில் என்னும் இவர்தம் நூலும் சிந்து இசை பற்றிய இலக்கணத்தை அரிதின் எடுத்துரைக்கும் நூலாகும்.இவர்தம் தமிழ்ப்பணிகள் கண்டு பல நிறுவனங்கள் இவரைப் பாராட்டியுள்ளன.

இலக்கணச்சுடர்,இயலிசைச்செம்மல்,முத்தமிழ்ச்சான்றோர்,நல்லாசிரியர்(நடுவணரசு),மொழிப்போர் மறவர், சிந்திசைச்செம்மல், பாவலர் அரிமா, தமிழ்க்காவலர், கலைச்செல்வம்,பாவேந்தர் பைந்தமிழ்க்காவலர் உள்ளிட்ட பட்டங்ஙகளும் விருதுகளும் குறிப்பிடத்தகுந்தன.

முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்க்கொடைகளுள் குறிப்பிடத்தகுந்தன:

01.நூறு சொல்வதெழுதல்கள்,1957
02.இனிக்கும் இலக்கணம்,1981
03.கம்பன் பாடிய வண்ணங்கள்,1987
04.இலக்கண எண்ணங்கள்,1990
05.பாவேந்தர் வழி பாரதி வழியா?,1990
06.சிந்து இலக்கியம்,1991
07.சிந்துப்பாடல்களின் யாப்பிலக்கணம்,1993
08.சிந்துப்பாவியல்,1994
09.மொழிப்பார்வைகள்,1995
10.பாவலர் பண்ணை,1997
11.மொழிப்புலங்கள்,1999
12.இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்,2001

மொழி வளர்ச்சி

13.என் தமிழ் இயக்கம்-1, 1990
14.என் தமிழ் இயக்கம்-2, 1992
15.தாய்க்கொலை,1992
16.என் தமிழ் இயக்கம்-3, 1994
17.என் தமிழ் இயக்கம்-4, 1996
18.என் தமிழ் இயக்கம்-5, 1998
19.எருமைத் தமிழர்கள்,1998
20.இன்றைய தமிழர்கள் மொழிப்பற்று உள்ளவர்களா?,1999
21.கழிசடைகள்,2002
22.என் தமிழ் இயக்கம்-6, 2005
23.என் தமிழ் இயக்கம்--7,2006
24.இலக்கிய எண்ணங்கள்,1998
25.புகார் முத்தம்,1991
26.கற்பு வழிபாடு,1994

பாடல்

27.ஓட்டைப் புல்லாங்குழல்,1990
28.கம்பனுக்குப் பாட்டோலை,1990
29.பன்னீர்மழை,1991
30.அருளையா? பொருளையா?,1999

இசை

31.பாவேந்தரின் இசைத்தமிழ்,1990
32.இசுலாம் வளர்த்த இசைத்தமிழ்,1996
33.ஏழிசை எண்ணங்கள்,1998
34.சிலப்பதிகாரம்-தமிழன் படைத்த கலைக்கருவூலம்,2000

வரலாறு

35.புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது,1994
36.பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்,2003



முனைவர் இரா.திருமுருகனார் முகவரி:

முனைவர் இரா.திருமுருகனார்
ஏழிசைச்சூழல்,
62,மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி-605 001
பேசி : 0413- 2334391

இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம்

லேபிள்கள்: pondicherry, puducherry, புதுச்சேரி, முனைவர் இரா.திருமுருகனார்

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா

Wednesday, 27 May 2009

LYONல் புல்லாங்குழுலிசை

லியோனில் பிரஞ்சுமொழியில் இசைபற்றிய விளக்கத்துடன் குழலிசை விருந்து!
வழங்கியவர் முத்தமிழ்ச்செல்வர் இயலிசைப்புலவர் இராச.வேங்கடேசனார் புதுவை.
பிரஞசு மக்கள் அவையில் குழலிசையில் அகமகிழ்ந்து கரவொலி எழுப்பிப்பாராட்டினர்.!





Wednesday, 20 May 2009

முத்தமிழ்ச் சங்கம் - தமிழ்வாணி இணையதளம் 10 ஆண்டு விழா







மே மாதம் 9-ஆம் நாள் (திருவள்ளுவர் ஆண்டு 2040 மேழம்; 26) சனிக்கிழமை அன்று முத்தமிழ்ச்சங்கம்-தமிழ்வாணியின் 10ஆம் ஆண்டின் மாபெரும் இலக்கிய விழா, சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இயல் இசை நாடகம் முத்தமிழ:; என முத:தமிழும் முழுமையாக முகிழ்த்தன.

விழா நடைபெற்ற இடம் :
சால் தெ லொத்தல் தெ வீல், லெ புர்ழே
(Salle de l'Hôtel de Ville, Le Bourget)

விழாவினை ரசிக்கத் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் வந்திருந்தனர். தம் இன்னிசையோடு குழலிசையும் கவியுரையும் வழங்கியவர் இயலிசைப்புலவர் கலைமாமணி இராச.வேங்கடேசனாh அவர்கள். முத்தமிழ்ச்சங்கத்தின் அழைப்பை ஏற்றுச் சிறப்பு விருந்தினராகப் புதுவையிலிருந்து இவர்வந்திருந்தார்.
அண்ணாதுரை இணையர் மங்கல விளக்குகள் ஏற்றினர். 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாவேந்தரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அமிழ்தாக வழங்கினர் திருமதி சரோஜாதேவராசு, திருமதி பூங்குழலிபெருமாள்.
வந்திருந்தோரை வருக வருக எனச் சங்கத்தின் நிறுவனர் ரூ தலைவர் திரு.கோவிந்தசாமி செயராமன், வரவேற்றதோடு தமக்கு உறு துணையாக இருந்தவர்களுக்கு நன்றியும் நவின்றார். அவரோடு இணைந்து பிரஞ்சு மொழியில் தம் வரவேற்புரையை வழங்கினார் திருமதி திக்.ஆச்சி.
விழாவில்திருமதி டாக்டர் இராச. இராசேசுவரி பரிசோ மாணவி. செல்வி எதுவார் மினர்வாவின் நாட்டியமும் இராசேசுவரியின் கணீர்க்குரலில் ஒலித்த இசையும் சிறப்பாக இருந்தன.
தொடர்ந்து கலைமாமணி இராச.வேங்கடேசனார் எழுதிய இருமொழிக்கவிதை நாடக நூல் வெளியிடப்பட்டது. நூலின் பிரதியை நகரத் தந்தை வெளியிடத் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் நூலைப் பெற்றுக்கொண்டனர். நூல் வெளியீட்டு வழாவிற்குப் பின்னர் கலைமாமணி இராச.வேங்கடேசனார்க்கு "முத்தமிழ்ச்செல்வர்' என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, மிகச்சிறந்த பிரஞ்சு - தமழ் அகராதியைப் படைத்து, அச்சிட்டு வெளியிட்ட திருமிகு நாகராசன், எம்.ஏ அவர்களுக்கு பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் இயலிசைப்புலவர் இராச வேங்கடேசனார் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கி முத்தமிழ் முத்துக்களை அள்ளி வழங்கினார்.. தொடர்ந்து முத்தமிழில் பெண்ணியல், இசையியல், நட்பியல், அரசியல், துறவியல், உளவியல், வாழ்வியல் என்ற தலைப்புகளில் கவிஞர் கி.பாரதிதாசன், கவிதாயினி லினோதினி சண்முகநாதன், கவிஞர் மொரோ நடராசன், கவிதாயினி சரோஜாதேவராசு, புலவர்.பொன்னரசு, கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, கவிதாயினி பூங்குழலிபெருமாள் ஆகியோர் செவி இனிக்கக் கவியுரை வழங்கினர்.

மதிய உணவிற்குப் பின்னர் மோ பூக்கள் கழகத்தின் சிறுவர்கள் சிறப்பான முறையில வழங்கி;ய இராமாயண நாட்டிய நடனம் அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது

கவிச்சித்தர் கண. கபிலனார் எழுதிய முப்பாலும் அப்பாலும் என்ற நூலும், சங்கத்தின் பத்தாம் ஆண்டுச் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன. விழாவில் புலவர் வ.கலியபெருமாளுக்கும் புதுவை செல்வம் ஆதவனுக்கும் முத்தமிழ்ச்சங்கம் பட்டயம் வழங்கிச் சிறப்பித்தது.

தொடர்ந்து, கலைமாமணி இராச.வேங்கடேசனார் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் புதுவை ஆதவனின் தொடக்கவுரையும், புலவர் வ.கலியபெருமாள், திரு.யோகானந்த அடிகளார், திருமிகு அலன் ஆனந்தன் ஆகியோர் வழங்கிய சிறப்புரைகளும் சிறப்பாக அமைந்தன. விழா நிறைவில் சங்கத்தின் தலைவர் நன்றியுரை நவின்றார். சங்கத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புலவர் பொன்னரசும், திருமதி பூங்குழலி பெருமாளும் தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் சங்கத்தின் தலைவர் கோவிந்தசாமி செயராமன் சிறப்பாகச் செய்திருந்தார்.

வருணனை : திருமதி பூங்குழலி பெருமாள்

Wednesday, 8 April 2009

முத்தமிழ்ச் சங்கத்தின் 10ஆம் ஆண்டு இலக்கியவிழா


முத்தமிழ்ச்சங்கத்தின் பத்தாம் ஆண்டு இலக்கியவிழா எதிர்வரும் சித்திரையில்(மே)
9 ஆம் தேதி (09.05.2009)அன்று கலைநிகழ்ச்சிகளுடன்
சிறப்புற நடைபெற இருக்கிறது!
சிறப்பு விருந்தினா:; இயலிசைப்புலவர்
கலைமாமணி இராச.வேங்கடேசனார்.
மற்றும் பல தமிழ் அறிஞர்களும்
தமிழன்பர்களும் வருகைதர உள்ளனர்.
முத்தமிழ்ச்சங்கத்தன் பைந்தமிழ் இலக்கிய விழாவிற்கு அனைவரையும் வருக! வருக!
என இருகரம்கூப்பி அன்புடன் அழைக்கிறோம்.!

முத்தமிழ்ச் சங்கத்தின் 10ஆம் ஆண்டு இலக்கியவிழா