போலி ஏஜன்ட்கள் மூலம் செல்லும் இவர்களில் பலர், சுற்றுலா விசா மூலம் அனுப்பப் படுகின்றனர். தாங்கள் எந்த விசா கொண்டு வந்தோம் என்பது கூட தெரியாததால், விசா காலம் முடிந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பணிபுரியச் செல்லும் நிறுவன ஒப்பந்தத்தின் விவரத்தையும் யாரும் பார்ப்பதில்லை. மலேசிய நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை, முழுமையாக கொடுக்காமல் சில ஏஜன்ட்கள் ஏமாற்றுகின்றனர். இதனால், மூன்று மாதங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், சிலர் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
அவர்களை, அந்நாட்டு போலீசார் பிடித்து சிறையில் அடைக்கின்றனர். இப்படி, மலேசிய சிறைகளில் 3,600 தமிழர்களும், முகாம்களில் 2,400 தமிழர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். இது தவிர 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தோட்டம், கடைகள், கோழிப்பண்ணை, ஒயின் ஷாப் என பல இடங்களில் வேலை செய்து கொண்டு, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவிற்கு வேலைக்கு சென்று சிக்கலில் மாட்டிய பெண்கள் பலர், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டில், தலை மறைவாக இருந்த வெளிநாட்டினருக்கு மலேசிய அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. பொது மன்னிப்பு வழங்கப்படுபவர்களின் விமானச் செலவு, அவர்கள் மீண்டும் தங்கிவிடாமல் இருப்பதற்கான உத்தரவாதம் மற்றும் எத்தனை பேர் தலைமறைவாக தங்கியிருக்கின்றனர் என்ற விவரம் என பல சிக்கல்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.இந்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால், பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க மலேசிய அரசு தயாராக இருப்பதாக தெரிகிறது. இத்தருணத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்லும் என, மலேசிய வீதிகளில் பல தமிழர்கள் சுற்றித் திரிகின்றனர்.அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகும் தமிழர்களுக்கு முறையான பதில் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மத்திய அமைச்சகமும், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மலேசிய தமிழர்களின் நலன்கருதி, காமன்வெல்த் சமரச தீர்ப்பாயம் மற்றும் மனித உரிமைகள் பிரிவு அங்கு சென்று விசாரனை மேற்கொண்டது. அந்த அமைப்பின் தெற்காசிய தலைவரும், வக்கீலுமான செல்லம் பாரிமன்னன் கூறுகையில், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம், உதவிக்காக அளித்துள்ள தொலைபேசிஎண்களை ஏழு நாட்களாக தொடர்பு கொண்டும், யாரும் முறையாக பதிலளிக்க வில்லை.
மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் காந்தாவை நாங்கள் சந்தித்தபோது, "சட்ட விரோதமாக இங்கு வாழும் தமிழர்களுக்கு நாங்கள் உதவ முடியாது' என்றார். இந்த விஷயத்தில் வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மிரண்டு போனதும் மீண்டு வந்ததும்!:சென்னை நந்தனத்தில் இருந்து செயல்பட்ட போலி நிறுவனம் ஒன்றின் மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட, நாகப்பட்டினம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் கூறியதாவது:பணிக்கான விசா மூலம், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 30 பேர் கொண்ட குழுவில், 90 ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு, நானும் போனேன்.
எங்களை அனுப்பிவிட்டு ஏஜன்ட் சென்றுவிட்டதால், மலேசியா ஏர்போர்ட்டில் எங்களை அழைத்துச் செல்ல, அங்குள்ள ஏஜன்டுக்காக காத்திருந்தோம்.பத்து நாட்கள் வரை அவர் வராததால்,மொழி தெரியாத நாட்டில் சாப்பாட்டிற்கு வழி தெரியாமல் தவித்தோம்.பிறகு வந்த ஏஜன்ட் மூலம், ஒரு நிறுவனத்தில் வேலை செய்தேன். சம்பளம், வேலை நேரம் எல்லாமே, ஏஜன்ட் சொன்னதற்கு மாறாக இருந்ததால் மிரண்டு போனேன்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தவாவது சம்பாதிக்க வேண்டுமே என நினைத்து, பல இடங்களில் வேலை செய்தும் வட்டியை மட்டுமே கொடுக்க முடிந்தது. வேறு வழி இல்லாமல், ஒரு வழியாக நாட்டிற்கு மீண்டும் வந்து விட்டேன்.என்னைப் போன்று பல ஆயிரம் பேர், திரும்பி வரக்கூட பணம் இல்லாமல் அங்கு தவிக்கின்றனர்.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
No comments:
Post a Comment