-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Thursday, 23 September 2010

செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சமின் லெபோ

முதல் நாள் : திறப்பு விழா

கட்சிக் கொடிகள் கட்டக் கூடாதென்ற கலைஞரின் கட்டுப்பாடான கட்டளையைக் கடமையெனக் கொண்ட கழகக் கண்மணிகள் கண்ணியத்துடன் நடந்துகொள்ளக் கட்சிக்கொடி கோவை நகரில் காணாமல் போயிருந்தது. ஆனால், காற்றிலே (மாநாட்டுக்) கொடிகள் கலகலக்கக் களிப்பு ஊற்றிலே குளித்துக்கொண்டிருந்தது கோவை மாநகரம். சூன் திங்கள் 23 -ஆம் நாள் - காலை 10 மணி. கோபங்கொண்ட மனையாளைப் போலக் கோவைச் சூரியன் காய்ந்துகொண்டிருந்தான். பாவையைப் பார்க்க வரும் காளைகளாய் மேகங்கள் மேய்ந்துகொண்டிருந்தன. செம்மொழி மாநாட்டுக்குத் தன்னாலான உதவி செய்வோமெனப் பாலக்காட்டு இதமான 'தென்றல்' பதமாக வீசிகொண்டிருந்தது. உதய சூரியனாய்க் கலைஞர் (கூட்டத்தில், கலைஞரின் மேல் தலையை மட்டும்தான் காணும் பேறு பெற்றேன்! அதனால்தான் இந்த உவமை!) உலா வந்து மாநாட்டு அரங்கின் மாஆஆஆஆ... பெரும் பந்தலில் (அடேங்கப்பா, மூணு கி.மீ. இருக்குமா!!!) நுழைந்தார். அவருக்கும் முன்னாடியே அவருடைய ஆரவாரப் பரிவாரங்கள் வந்து சேர்ந்திருந்தன. இறுதியாக, ஒரு வழியாக வந்து சேர்ந்தார் இந்தியக் குடியரசின் தலைவர் மேதகு பிரதீபா பாட்டில் அவர்கள். அலை மோதிய மக்கள் கூட்டம் அமைதியாக எழுந்து நிற்க, அழகாகச் சோடிக்கப்பட்ட அரங்கினுள் இந்தியத் தேசியக் கீதம் கம்பீரமாக எதிரொலித்தது. தொடர்ந்து, மருத்துவர் சிவசிதம்பரம் (அட நம்ம சீர்காழியோட மவன்தானுங்கோ) தமிழ்த்தாய் வாழ்த்தைத் தம் தந்தையின் குரலில் (ஒரு சுருதி இறக்கியே) பாடினார். நாட்டுப்பண் பாடியபோது எழுந்து நின்ற மக்கள் கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்தின்போது டபெக்கென்று அமர்ந்துகொண்டது! 'எல்லாரும் எழுந்து நில்லுங்கள்' என நான் சத்தம் போட, என்னவோ ஏதோவென்று சிலர் எழுந்து நிற்க, அவர்களைப் பார்த்து மற்றவர்களும் எழ... தமிழ்த் தாயின் மானத்தைக் காப்பற்றிவிட்ட பெருமிதம் எனக்குள்.

Image

Image
Image
Image

பிறகு? பிறகு என்ன... நடந்தனவற்றைப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள் @ தொ(ல்)லைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆங்கிலத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், (நம் நாட்டில்தான் தமிழைவிட ஆங்கிலம் படித்தவர்கள்தாம் அதிகம் அல்லவா. அதனால்தானோ என்னவோ மொழி பெயர்க்க மொழிபெயர்ப்பாளர் எவரையும் அமர்த்தவில்லை!) தமிழின் அருமை பெருமைகளைப் பேசினார். உயர்வான மொழி என்றார். அம்மொழி செம்மொழியே எனப் புகழாரம் சூட்டினார். 'அத்தகைய சிறப்பான மொழியை இந்தியப் பாராளுமன்றத்தில் நுழைய விடாமல் தடுத்திருகிறீர்களே..' என்று கேட்க மேடையிலே இருந்தவர்களுக்குத் தோன்றவில்லை (துணிவில்லை!). ஆனால் ஒருவர் கேட்டார்... உரத்துக் கேட்டார்! கூட்டத்தில் அவர் குரல் எடுபடவில்லை. குரல் கொடுத்த கோமான் வேறு யாரும் இல்லை அடியேன்தான். அக்கம் பக்கம் இருந்தவர்கள் (பின்னால் நின்றிருந்த காவலர் உட்பட- ஒருவேளை சி ஐ டி யோ!) பலரும் ஒரு மாதிரி பார்த்தார்கள். தனிமரத் தோப்பாக ஒருவர் மட்டும் 'சரியாகச் சொன்னீர்கள் சார்' என்று திருவாய் மொழிந்தார். அசட்டுச் சிரிப்புடன் நன்றிப் பார்வை பார்த்தேன். வெளிநாட்டு அறிஞர்கள், உள் நாட்டு அறிவிலிகள்... மன்னிக்கணும்... அறிவு சீவிகள்... அவர்கள், இவர்கள் என எல்லாரும் பேச்சு மழை பொழிந்தார்கள். அவற்றை எல்லாம் சொல்லி உங்களை அறுப்பானேன். இறுதியாகக் கலைஞர் பேசினார். இல்லை... இல்லை படித்தார். யார் யார் அவரை உன்னிப்பாகக் கவனித்தார்களோ இல்லையோ அவரின் பின்னால் அமர்ந்து இருந்த உதவியாளர் திரு.சண்முகநாதன் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார். தவறாகப் பக்கத்தைப் புரட்டிவிட்ட கலைஞருக்குச் சரியான பக்கத்தை அவர் எடுத்துத் தந்த வேகம் இருக்கிறதே... அடடா (நாளைக்கு நமக்கு வாழ்வு வந்தால், சண்முகநாதன் போன்ற அணுக்கத் தொண்டரைத்தான் வைத்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன் என்றால் பார்த்துகொள்ளுங்கள்). யாருமே கண்டுகொள்ளாத இன்னொருவரைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். அவர்? நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆரணங்கு! பெயர் தெரியவில்லை. ஆனால் அமிழ்தினும் இனிய குரல் @ ஆங்கிலக் கலப்பு அறவே இல்லாத் தமிழ் @ தக்க ஏற்ற இறக்கங்களோடு கூடிய, மாற்றுக்குறையா ஒலிப்பு @ தொய்வில்லா நிகழ்ச்சித் தொகுப்பு... அருமை, அருமை! (நல்ல வேளை, சின்னத்திரைக் குயில்களை மேடை ஏற்றிச் சின்னா பின்னமாக்கவில்லை! வாழ்க நிகழ்ச்சி அமைப்பாளர்கள்!).


Image


நேரம் நண்பகல். ''நானொருவன் இருப்பதை மடையா மறந்து விட்டாயா" என்று வயிறு ஓலமிடத் தொடங்கியவேளை. அறிவிப்பாளர் குரல் அமுதாய்ப் பாய்ந்தது - சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடிசியா வளாகத்தில் விருந்து காத்திருப்பதாக! சிறப்பு விருந்தினர்களாகிய நாங்கள் (என் துணைவியார் உட்பட) இடம் தேடி அங்கே விரைந்தோம். நந்திகளாய் வழி மறைத்தார்கள் காவலர்கள். செம்மொழி மாநாட்டுச் சிறப்பு விருந்தினர் என்ற அடையாள அட்டையைக் காட்ட வேண்டுமாம். காட்டினோம். அதைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளுங்கள் என்ற அறிவுரை வேறு. ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களாய் அதனைக் கழுத்தில் மாட்டிகொண்டு உள்ளே சென்றோம். திகைத்து வியந்து நின்றோம்....

அங்கே -

வாட்டஞ் சாட்டமான வள்ளுவப்பெருந்தகை வாகாக நின்று வரவேற்றுக்கொண்டிருந்தார். வியப்புக்குக் காரணம், வள்ளுவர் முழுக்க முழுக்கக் காய்கறிகளால் உருவாக்கப்பட்டிருந்ததுதான். (மூன்று நாட்களுக்குள் வள்ளுவர் சீர்குலையத் தொடங்கியதால் நான்காம் நாள் அவரை அகற்றி விட்டார்கள்). உள்ளே நுழைந்தால், ஏராளமான பேர்கள் - எல்லாருமே சிறப்பு விருந்தினர்கள்தாம், கழுத்தில் 'ஒலிம்பிக்' பதக்கம் தொங்கிக் கொண்டிருந்ததே! பழைய, புதிய நண்பர்கள்... சந்திப்பும் நல விசாரிப்பும்... கச்சேரி களை கட்டி விட்டது. முகமறியா மின்னஞ்சல் தொடர்புகள் இப்போது முக-முகத் தொடர்புகளாக மாறிக்கொண்டிருந்தன. பெரிய விசாலமான உணவகம். வெகு சுத்த பத்தமாக இருந்தது. சுவர் ஓரமாக, இரு பக்கங்களில் மேசைகள், விரிப்புகள் அவற்றின் மேல் வகை வகையான உணவு வகைகள். சைவம் ஒரு பக்கம், அசைவம் எதிர்ப்பக்கம். மேசைகளுக்குப் பின்னால் தொண்டர்கள். சின்னக் கரண்டியில் கொஞ்சமாக எடுத்துப் பரிமாறினார்கள்! ஏகப்பட்ட உணவு வகைகள், ஆதலால், குறைந்த அளவு குறையாகப் படவில்லை. தில்லுமுல்லு, தள்ளுமுள்ளு ஏதும் இல்லை. அனைவரும் பொறுமையாக, வரிசையில் நின்று வாங்கினார்கள். எல்லாருமே பெரிய படிப்பு படித்தவர்கள் அல்லவா. (அது மட்டுமல்ல - 'ஒலிம்பிக்' பதக்கம் மாட்டியவர்கள் மட்டுமே ஆய்வரங்க வளாகத்துள் அனுமதிக்கப்பட்டனர். எனவே புறம்போக்குகளுக்கு அங்கு இடம் இல்லை!).







ImageImage

தட்டு நிறைய உணவு. கொட்டிவிடாமல் சாப்பிடுவது கடினமாகவே இருந்தது. ஆற அமர அமர்ந்து உண்ண, போட்டிருந்த மேசை நாற்காலிகள் போதுமானவையாக இல்லை (இருந்தாலும், தரையில் ஒரு பருக்கை தவறி விழுந்தால் போதும், துப்புரவுப் பணியாளர்கள் ஓடோடி வந்து உடனே சுத்தம் செய்தார்கள். தமிழகத்திலா இப்படி என்ற வியப்பு!) சாப்பிட்டு முடித்து வெளியே வந்தால் தமிழர் வழக்கப்படி வாழைப்பழம், பீடா! ஐந்து நாள்களும் பகலுணவு இப்படியே! சுவை சுவையான வகை வகையான உணவுகள் - கோவை அன்னபூர்ணா உணவகம் தன் புகழை மீண்டும் நிலை நாட்டிக்கொண்டது!



Image

பலருடைய கவனம் எல்லாம் தட்டிலும் பக்கத்தில் இருந்த நண்பர்களோடு அளவளாவதிலும் இருந்தது. சுற்றி இருந்த சுவர்களை எத்தனை பேர் கவனித்தார்களோ தெரியவில்லை! கவனித்திருந்தால் வியப்பு உண்டாகி இருக்கும். அங்கே, சுவற்றில் - விருந்துக்குப் பொருத்தமான தமிழிலக்கிய வரிகள் மின்னிக்கொண்டிருந்தன. ('உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' @ 'செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு'). வந்திருக்கும் அறிஞர் பெருமக்களில் ஒரு சிலருக்குப் பொருள் தெரியாமல் போய்விட்டால்... என்று அஞ்சியோ என்னவோ அவ்வரிகளின் பொருளையும் அருகிலேயே எழுதி இருந்தார்கள். இவ்வளவு விலாவாரியாக உணவகத்தை விவரிக்கக் காரணம், மாநாட்டு அமைப்பாளர்களின் அருமையான் முன்னேற்பாடுகளை, உழைப்புகளை, இளந்தொண்டர்களின் பணிகளைப் புலப்படுத்தவும் மட்டும் அல்லாமல், ஆய்வரங்க அலசல்களைவிட இந்த உணவரங்க அலசல்களே சுவை மிக்கனவாக இருந்தன என்பதை உணர்த்தவும்தான்!

Image


உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா! உறங்க இடம் தேடி ஆய்வரங்கத்துள் (அங்கேதானே கூட்டமே இருக்காது!) நுழைத்தால்... அங்கும் இங்குமாக அறிஞர் பெருமக்கள் அலைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தோரணையும் பாவனையும் என்னையும் தொ(ப)ற்றிக்கொள்ள, அப்படியும் இப்படியும் சென்று பார்த்தேன். குளிரூட்டப்பட்ட சிறு சிறு அறைகள் அடுத்தடுத்து இருந்தன. ஒவ்வொரு அரங்கத்துக்கும் ஒவ்வொரு புலவர் பெயர்! (நல்ல வேளையாக இந்தக் காலத்துச்சால்ரா, சில்லுண்டிக் கவிஞர்களின் பெயர்களைச் சூட்டவில்லை!). நக்கீரனார் அரங்கம், நப்பூதனார் அரங்கம்... அரங்கம் அரங்கமாக ஓடி ஓடிப் போய்ப் பார்த்தேன். இன்னொரு பக்கம் சுஜாதா, துபாய் உமர்த்தம்பி, முரசொலி மாறன், சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி... என நினைவில் வைத்துப் போற்ற வேண்டியவர்கள் பெயர்களிலும் அரங்குகள்.... பூரிப்பால் என்னுயரம் ஒரு முழம் கூடிப்போயிற்று! பழங்காலப் புலவர் பெயர்களை அழகாக எழுதியதோடு அதற்கும் கீழே நம் செந்தமிழ் நாட்டு இக்காலக் கண்ணுள் வினைஞர்கள் கைபுனைந்தியற்றிய ஓவியங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாயின. (அந்த ஓவியங்களைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். விலையும் அதிகம் இல்லை 1200 உரூபாகள் மட்டுமே! கண்காட்சியில் 900 உரூபாக்களுக்குக் கொடுத்தார்கள். தாரளமாக வாங்கலாம். மிகை ஊதியம் அந்தக் கலைஞர்களுக்கே போய்ச் சேருமாம்! கேட்டதும் உடனே வாங்கிட்டேன்ல!). மனமெலாம் மகிழ்ச்சிப் பூக்கள் மலர, அந்த மகிழ்ச்சி இன்னும் பெருகிற்று. ஆங்காங்கே பழைய, புதிய நண்பர்களைச் சந்திக்க நேர்ந்ததுதான் காரணம். ஆம், அமெரிக்கத் தம்பி ஆல்பர்ட், சிங்கப்பூர்த் தோழர் பழனி, சிங்கை கிருஷ்ணன், உத்தமம் மணியம், கனடா நாட்டு செல்வா(செல்வகுமார்), சென்னையிலிருந்து (அட) நம்ம போஸ் ஐயா, அண்ணாகண்ணன், அமீரகத்திலிருந்து நாக.இளங்கோவன்... கூடவே கவிதாயினிகள் மதுமிதா(!), திலகபாமா... மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். மின்னஞ்சல் வழியாகத்தானே இவ்வளவு காலமும் பேசினோம். இப்போது நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் பார்த்துப் பேச முடிகிறதே. அங்கே நின்றோம், இங்கே நின்றோம்... பளிச் பளிச்சென மின்னல்கள் வெட்டின. இதயத்தில் இடம் பெற்றவர்களை ஒளிப்படக் கருவிக்குள் சிறைப் பிடித்தோம்... நேரம் ஓடியதே தெரியவில்லை. பிற்பகல் பொழுதும் முடிந்தது. தங்கி இருந்த இடம் சேர்ந்தோம்.
நன்றி அதிகாலை

No comments: