வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு,
கனவு மெய்ப்படவேண்டும், நந்தகுமாரா நந்த குமாரா ஆகியவற்றிர்க்குப்பிறகு மூன்றாவதாக அண்மையில் வெளிவந்துள்ள எனது சிறுகதை தொகுப்பு சன்னலொட்டி அமரும் குருவிகள், புதுமைப்பித்தன் பதிப்பகம் கடந்தமாதம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான பாவண்ணண் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையை தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.
அன்புடன்
நா.கிருஷ்ணா
------------------------------------------------------------------------
நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதையுலகம்
-பாவண்ணன்
கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் கதைகளையும் அறிவியல் புனைகதைகளையும் இணைய தளங்களிலும் இலக்கியச் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதினார். இதற்கிடையில் நீலக்கடல், மாத்தாஹரி என்னும் நாவல்களை எழுதி முடித்தார். தன் எழுத்தாக்கங்கள் வழியாகவே தன் ஆளுமையை வெளிப்படுத்தி தமிழ்ச்சூழலில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். இவருடைய இடைவிடாத உழைப்பும் அக்கறையும் பெரிதும் மதிப்புக்குரியவை.
வாழ்வின் சிக்கல்தன்மையை முன்வைத்து உரையாடும் இவருடைய சிறுகதைகள் எக்கணத்திலும் அதை எளிமைப்படுத்திப் பார்க்காமல் சிக்கலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் இயங்குகின்றன. இதுவே இத்தொகுதியின் சிறப்பம்சம் என்று சொல்லலாம். ஒருசில கதைகளில் அந்த மையத்தை அவர் எளிதாக வந்தடைகிறார். சிலவற்றில் முட்களும் புதர்களும் மண்டிக்கிடக்கிற வழியை விலக்கமுடியாமல் தடுமாறி, சற்றே சுற்றியலைந்து களைப்போடு வந்தடைகிறார். இருவிதமான கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. எத்தருணத்திலும், கலையம்சம் குன்றாமல் ஒரு படைப்பை முன்வைக்கவேண்டும் என்பதில் இவருக்குள்ள ஈடுபாடு பாராட்டத்தக்க ஒன்று. இந்த ஈடுபாடும் உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும். இவருடைய சிறுகதைகள் புதுச்சேரி, பாரிஸ், இலங்கை என பல களங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவருடைய பின்னணித் தேர்வு ஒரு கதையிலும் பிசகவில்லை என்பதை சிறப்பம்சமாகச் சொல்லவேண்டும்.
"சன்னலொட்டி அமரும் குருவிகள்" இத்தொகுதியில் உள்ள முக்கியமான கதைகளில் ஒன்று. மழைத்தூறலுக்குப் பயந்த குருவிகள் இவை. சொந்தக் கூட்டை இழந்தவை. குளிரும் காற்றும் தாக்க நடுங்குபவை. தொடர்ந்து வானத்தில் பறக்கவோ, மரக்கிளையில் அமரவோ சக்தியில்லாதவை. உட்கார்ந்து ஆசுவாசமடைய அவற்றுக்கு ஈரமில்லாத ஒரு இடம் உடனடியாக தேவைப்படுகிறது. எங்கெங்கோ அலைந்தலைந்து இறுதியாக ஒரு வீட்டை அடைகின்றன. ஆனால் அவற்றுக்கு வீடு தேவையில்லை. சற்றே கொஞ்சமாக இடமிருக்கிற சன்னலோரம் மட்டுமே போதும். வீடு தனக்குரிய இடமல்ல என்பது குருவிகளுக்குத் தெரியாததல்ல. ஆபத்துக்கு வேறு வழியில்லை என்பதால் வந்துவிட்டன. அந்த ஆபத்துக்கட்டத்தில்கூட தன் எல்லையை மீறி உள்ளே செல்லவில்லை. நடுக்கத்துடன் ஓரமாக ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் குருவிகளைப்பற்றிய கதை அல்ல இது. கூடில்லாத குருவிகளைப்போல வாழ பொருத்தமான ஒரு இடமோ, நிலமோ இல்லாத மனிதர்களின் கதை. ஒருவன் இலங்கையைச் சேர்ந்தவன். இன்னொருவன் புதுச்சேரிக்காரன். இருவருமே சொந்த இடத்தில் தம்மைப் பொருத்திக்கொள்ள இயலாதவர்கள். தங்குமிடம் தேடி குருவியைப்போல அலைகிறவர்கள். போலிக் கடவுச்சீட்டுகள்மூலம் நாடுவிட்டு நாடு வந்தது பிழையானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களுடைய பயணம் ஒதுங்குவதற்கு ஒரு இடம்தேடி. உயிரைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு வேலையையும் தேடி. இலங்கைக்காரனாக அடையாளம் சுமந்து புதுச்சேரிக்காரனும் இந்தியனாக அடையாளம் சுமந்து இலங்கைக்காரனும் பயணப்பட்டு அகப்பட்டுக்கொள்வது ஒருவித துயர்முரண். அந்தத் துயர்முரண் தண்டனைக்குக் காத்திருக்கும் தருணத்திலும் அவர்களை புன்னகை புரியவைக்கிறது. நட்புடன் உணரவைக்கிறது. இன்னும் இப்படி நிறைய எழுதிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், குருவியின் படிமம் கதைக்கு அழகையும் வலிமையையும் சேர்க்கிறது. எளிமையும் பயமும் கொண்ட பறவை அது. பற்றிக்கொள்ள ஒரு பிடிமானம் தேடி வந்தவர்களை அடையாளப்படுத்த இதைத்தவிர பொருத்தமான படிமம் வேறென்ன இருக்கமுடியும்?
"நாராய் நாராய் செங்கால் நாராய்" என்பது இன்னொரு அழகான சிறுகதை.
தீராத வாழ்வின் துயரத்தை உணர்த்தும் சத்திமுத்தப்புலவரின் கவிதையைப்போலவே நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதையும் வாழ்வின் துயரத்தை முன்வைக்கிற ஒன்று. வானில் பறக்கும் நாரையின் பயணம் ஒரு செய்தியைச் சுமந்துகொண்டு பறக்கிறது. எங்கோ தொலைதூரத்தில் துயரத்தில் தோய்ந்திருக்கும் மனைவியிடம் தான் உயிர் பிழைத்திருப்பதையே செய்தியாகச் சொல்லியனுப்பிய புலவரின் அன்றைய துயரக்கதைதான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்நிறைந்த இலங்கைச்சூழலில் உயிருடன் இருப்பதே இன்றைய தேதியில் ஒரு பெரிய செய்தி. அதைச் சுமந்தபடி கடலுக்கு மேலே வானத்தில் அங்குமிங்கும் பறந்துகொண்டிருக்கின்றன நாரைகள். செய்தி சுமந்த நாரைகள் வானத்தில் பறந்துகொண்டிருக்க, புவியின்மீது ஒவ்வொரு கணத்திலும் உயிருக்குப் போராடும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காண்கிறோம். பதுங்குகுழி வாழ்க்கை, துப்பாக்கிமுனைக் கேள்விகள், எதிர்பாராத மரணங்கள் என எல்லாமே கட்டுக்கோப்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. பீதிநிறைந்த படகுப்பயணத்தை வாசிக்கும்போது நம் மனமும் பீதியில் துவளுவதை உணரமுடிகிறது.
மனத்தின் கோலத்தை நுட்பமான சித்தரிப்புகளுடன் உணர்த்தும் சிறுகதை "புலியும் பூனையும்". புலியும் பூனையும் வேறுவேறு ஆளல்ல. புலியாக இருக்கும் ஒருவரே ஒரு சமயத்தில் பூனையாகப் பதுங்கிப் பம்முகிறார். காலம் முழுக்க சீற்றம் நிறைந்த புலியாகவும் உறுமும் புலியாகவும் நகம்கொண்ட பாதத்தால் அறைகிற புலியாகவும் முரட்டுப் பிடிவாதமும் முறைக்கும் விழிகளும் கொண்ட புலியாகவும்மட்டுமே பார்த்த ஒருவரை சூழ்நிலையின் நெருக்கடிகள் பின்வாங்கிப் பதுங்கவைக்கின்றன. ரௌத்திரத்துக்கு நேர்எதிராக நடுக்கத்தை புலியின் முகத்தில் முதன்முதலாகக் காணநேர்கிற ஒருவர் எப்படி உணரக்கூடும்? உறுமலான அதட்டல்களால் கிட்டத்தட்ட ஒரு அடிமைபோல தன்னை நடத்துகிற கணவன் நடுங்கித் தடுமாறுவதை மிகஅருகில் உட்கார்ந்து அணுஅணுவாகப் பார்க்க நேர்கிற மனைவி எப்படி உணர்வாள். அதைத்தான் படிப்படியாக சித்தரித்தபடி செல்கிறது கதை. முதலில் ஒரு நம்பமுடியாமை. அச்சம். மரபின் பழக்கம் அவளை அப்படி அழுத்துகிறது. பிறகு மனஆழத்தில் சட்டென திரண்டெழுகிறது ஒருவித எதிர்ப்புணர்வு. தன் களிப்பு வெளிப்பட்டுவிடாதபடி அச்சமெனும் போர்வையைப் போர்த்தியபடி உள்ளூர கணவனுடைய நடுக்கத்தைக் கொண்டாட்டத்தோடு பார்க்கிறாள் அவள். ஆவேசத்துக்கும் நீண்ட உரையாடலுக்கும் இடம்கொடுக்கக்கூடிய தருணங்களில் எல்லாம் அவை வெளிப்பட்டுவிடாதபடி கவனமாக எழுதப்பட்டுள்ளது சிறுகதை. எந்த இடத்திலும் கலைத்தன்மைக்குப் பாதகம் நேராதபடி பார்த்துக்கொள்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.
நான் படித்த அளவில் இக்கதைகள் எனக்கு வழங்கிய அனுபவத்தையே இங்கு முன்னுரையாக எழுதியிருக்கிறேன். இத்தொகுதியை முதன்முதலாக வாசிக்க நேர்கிற இன்னொரு வாசகர் இதே திசையில் செல்லவேண்டும் என்பது எவ்விதமான கட்டாயமும் இல்லை. அவருடைய சுதந்திரப் பயணத்துக்கு இக்குறிப்புகள் ஒருபோதும் தடையாக இருக்காது. ஆனால், தன் வாசிப்பின் முடிவில் இதேபோல இன்னொரு முன்னுரையை அவர் எழுதிப் பார்க்க இது தூண்டுகோலாக இருக்கும்.
நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
அன்புடன்
பாவண்ணன்
No comments:
Post a Comment