தஞ்சாவூர், அக். 20: உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் முழுநேர இயக்குநர் பணியிடம் கடந்த 17 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
மேலும், நூலகத்தில் சில முக்கியப் பணியிடங்களும் காலியாகவுள்ளன. இதனால், இந்த நூலகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடுமோ என்ற அச்சம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நூலக நிர்வாகக் குழுவின் உறுப்பினர் -செயலரான மாவட்ட ஆட்சியர்தான் இப்போதும் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். இவரது பிற பணிகள் காரணமாக நூலக விஷயத்தில் அவரால் முழுக் கவனத்தைச் செலுத்த முடிவதில்லை.
சரஸ்வதி மகால் நூலகம் கடந்த 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 5 உறுப்பினர் நிர்வாகக் குழு நூலகத்தை நடத்தி வந்தது.
நூலகத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெறுவதை எளிமையாக்குவதற்காக நூலகத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அப்போதைய மத்திய கல்வி ஆலோசகர் கபிலவாத்ஸ்யாயன் பரிந்துரைத்தார். அதன்பேரில் 1983-ம் ஆண்டு சரஸ்வதி மகால் நூலகம் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நூலகத்தை நிர்வகிக்க மாநிலக் கல்வித் துறை அமைச்சரின் தலைமையின் கீழ் மத்திய கலாசாரத் துறைச் செயலர், மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலர், கோல்கத்தா தேசிய நூலக இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய 14 பேர் கொண்ட ஆளுமைக் குழு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர் செயலர் நூலக இயக்குநராவார்.
1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நூலகத்தின் முழு நேர இயக்குநர் பணியிடம் நிரப்பப்படவே இல்லை. கடந்த 2006-ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முழு நேர இயக்குநர் பதவிக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
நூலகத்தில் சுவடிகளைப் படித்து எழுதி அச்சுக்கு கொடுக்க வேண்டிய சம்ஸ்கிருதம், தமிழ், மராட்டி, தெலுங்குப் பண்டிதர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே காலியாக உள்ளன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயராய்வு மையமாக அங்கீகரிக்கப்பட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில், இங்கு அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய மொழியியல் வல்லுநர்கள் யாரும் இல்லை.
இந்த நூலகத்தின் நிரந்தரப் பணியாளர்களின் பணியிடங்கள் 46 உள்ளன. அவற்றில் ஏறத்தாழ பாதிப் பேர் ஓய்வு பெற்று விட்டதால், பணியிடங்கள் காலியாகவே உள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மராட்டி போன்ற மொழியியல் துறைகளில் யாருமே இல்லாமல் அத்துறைகள் முடங்கிப் போய் உள்ளன.
இதுபோல வெளியீட்டு மேலாளர், காப்பாளர், போன்ற முக்கியப் பணியிடங்களுக்கும் நூல் வெளியீட்டுப் பிரிவு நூல் கட்டுமானப் பிரிவு போன்ற துறைகளிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் நூலகப் பணிகள் அனைத்துமே முடங்கி போய் உள்ளன.
"அரிய சுவடிகள், மதிப்புமிக்க நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தைப் பாதுகாத்து, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மொழியியல் வல்லுநர்களை முழுநேர இயக்குநராக உடனே நியமிக்க வேண்டும்.
நூலகத்தை சென்னையில் இயங்கும் கீழ்த் திசை சுவடிகள் நிறுவனத்தின் கிளை நிறுவனமோ அல்லது மத்திய பண்பாட்டுத் துறையின் கீழோ எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது.
2007-08-ம் ஆண்டுக்குரிய நிர்வாகக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும், தற்போது நிர்வாக அலுவலராக உள்ள ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியை நீக்கிவிட்டு விதிமுறைப்படி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் பொறுப்பு வகிக்கும் ஆட்சியர் எம்.எஸ். சண்முகத்திடம் கேட்டபோது, " விரைவில் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டி, முழுநேர இயக்குநர் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
மின்னணுப் பதிவால் ஆபத்து!
நூலகத்திலுள்ள சுவடிகளை மின்னணுப் பதிவு (டிஜிடலைசேஷன்) செய்வதற்காக மத்திய அரசு நிறுவனமான சி-டாக் உடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமல் நின்று விட்டது.
தற்போது திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வல்லுநர்கள் எந்தத் தனியார் நிறுவனத்தின் தொடர்பும் இல்லாமல் நூலகப் பணியாளர்களே இந்தப் பணியை எளிதில் செய்து விடலாம் என்கின்றனர். தனியாரிடம் அந்தப் பொறுப்பை அளிப்பதில் இருக்கும் ஆபத்தையும் அவர்கள் விளக்கினார்கள்.
இவ்வாறு தமிழகம் கடந்து வெளி மாநில தனியார் நிறுவனம் மூலம் இப்பணி செய்யும் போது விலை மதிக்க முடியாத பல அறிய சுவடிகள் வெளிநாடுகளுக்கு சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நூலகம் உரிய காப்புரிமையை இழக்க நேரிடும்.
""எம்ஜிஆர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் ஆந்திர அரசிடம் கிருஷ்ணா நீர் கேட்டபோது, இந்த நூலகத்தில் உள்ள தெலுங்குச் சுவடிகளை கொடுங்கள் என்று ஆந்திர அரசு கேட்டது. அப்போது அவர் அதற்கு மறுத்துவிட்டார். தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமாக தெலுங்குச் சுவடிகளை கைப்பற்றும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் துணை போவதாகத் தெரிகிறது. இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment