பிரான்சுக் கம்பன் கழகத்தின் 7 ஆம் ஆண்டுக் கம்பன் விழா
உலா வரும் நிலாவுக்கு விழா என்றால், அது நீந்தி வரும் நீல வானுக்கும் விழா என்றுதானே பொருள்! கம்பனுக்கு விழா என்றால் கன்னித் தமிழுக்கும் விழாதானே! என்றுமுள இன் தமிழ் இயம்பிக் கடந்த ஆறு ஆண்டுகளாக இசைகொண்டு வந்த பிரான்சுக் கம்பன் கழகத்தார் இந்த 7 ஆம் ஆண்டும் கம்பனுக்கு விழா எடுத்தனர். திருவள்ளுவர் ஆண்டு 2039, கன்னித் திங்கள் 11, 12 (கிறித்துவ ஆண்டு 2008, செப்தம்பர்த் திங்கள் 27, 28) நாள்களில் ஒளிநகராம் பரிநகரின் புறநகராம் லா கூர்னேவ் நகரின் சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் விழா இனிதே நடைபெற்றது. நேரில் வந்திருந்து தமிழ் விருந்துண்டு களிக்கும் வாய்ப்பு இல்லாதாதோரும் அறிந்துகொள்ளும்படி இதோ விழா வருணனைகள் :
காரி (சனி)க் கிழமை 27ஃ09ஃ08 அன்று மதியம். லர் கூர்நெவ் சித்தி விநாயகர் ஆலயத்தில் மணி அடித்துப் பூசை முடித்துத் தீபாரதனை காட்டுகிறார் அகோரமூர்த்திக் குருக்கள். பிரான்சுக் கம்பன் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான கவிஞர் கி; பாரதிதாசன் புதுச்சேரி, தமிழகத்திலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களுக்கு (பிரான்சுக் கம்பன் கழகம் என அச்சிடப்பட்டுள்ள) தேங்காய்ப் பூத்துவாலை போர்த்தி மரியாதை செய்கிறார். (இவர்கள் அறிமுகம் அவ்வப்போது கிடைக்கும்).
அடுத்துள்ள விழா மண்டபம் நோக்கி அனைவரும் வரிசையாகச் செல்கின்றனர். அங்குள்ள மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டும் பேறு கம்பக் காவலர்களும் பிரான்சுக் கம்பன் கழக உறுப்பினர்களுமான திருமதி கோமதி, திரு சிவஅரி இணையருக்குக் கிடைத்தது. அனைவரும் உள்ளே நுழைந்ததும், கம்பக் காவலரும் பிரான்சுக் கம்பன் கழகத்தின் பொருளாளருமான பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, கணீரென்ற உரத்த குரலெடுத்துக் கம்பன் வாழ்க! கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க என முழங்க, வாழ்க, வாழ்க என அனைவரும் பின்பாட்டு பாடினர். திருமதி சிவகௌரி கணாநந்தன் கம்பனின் இறைவணக்கம், பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்து பாட விழா இனிதே தொடங்கியது. செல்வி கனகராசா அபிராமி அழகான அடவுகளோடும் அடுக்கடுகான முத்திரைகளோடும் அருமையான பாவங்களோடும் வழங்கிய.பரதநாட்டியம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
விழாவைத் தொகுத்து வழங்கிய பேரா. பெஞ்சமின் லெபோ, கம்பக் காவலர் வழக்கறிஞர் தி. முருகேசனார் (புதுவைக் கம்பன் கழகச் செயலர்) அவர்களை வசிஷ்ட முனிவராக வருணித்து விழாத்தலைமை ஏற்க வருமாறு அழைத்த போது அவையில் சிரிப்பலை! புதுச்சேரி, தமிழகம் முதலிய இடங்களிலிருந்து வந்திருந்த நல்லோரையும் விழாவுக்கு வருகை தந்த பல்லோரையும் வருக வருக என வரவேற்றார் பிரான்சுக் கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன். புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு வைத்தியலிங்கம் அவர்கள் அன்புடன் அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தியைப் படித்துக்காட்டி, பிரான்சுக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டித் தன் தலைமை உரையைச் சுருக்கமாக நிகழ்த்தினார் வழக்கறிஞர் தி. முருகேசனார். அவரைத் தொடர்ந்து நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரனார் (புதுவைக் கம்பன் கழகத்தின் இணைச் செயலர்), வாழ்த்துரை வழங்கிப் பாராட்டினார்.
சிறப்புரை வழங்குவதற்காகத் திருச்சியிலிருந்து வந்திருந்த நாவுக்கரசர் முனைவர் சோ. சத்திய சீலனார் பிரான்சுக் கம்பன் கழகத்துக்கும் பரிநகருக்கும் புதியவர் அல்லர். இதற்கு முன்னர்ச் சில முறைகள் இங்கே வந்து அரிய பெரிய கருத்துகளை அள்ளித் தந்தவர். சிறப்புரைக்குரிய தலைப்பு : 'மானுடம் வென்றதம்மா". உரை ஒரு மணி நேரம் நீடித்தது. அவை, அப்படி இப்படி அசையாது, செவி வாயாக நெஞ்சு களனாக அவர் உரையை உள்வாங்கியது. மூன்றுடன் கூடிய அறுபதினாயிரம் மனைவியர்களை உடைய தசரதனுக்கு மகனாக வந்து வாய்த்த இராமனோ, 'இந்தப் பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்" என்று சூளுரைத்ததோடு அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறான். தனி மனித வாழ்வு எப்படிப் புனிதமாகக் கூடும் என்பதை அறத்தின் நாயகனாகிய இராமன் வாழ்வு காட்டுகிறது. அகந்தை, ஆணவம், ஆங்காரம், காமம்... போன்ற அரக்கக் குணங்கள் சீவாத்துமாவைக் கவர்ந்து செல்லுகின்றன. அந்த அரக்கக் குணங்களைக் கொன்று, வென்று சீவாத்துமாவைச் சிறை மீட்டுத் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது பரமாத்மா! இராமாவதாரத்தின் நோக்கம், வெறுமனே இராவணனை அழிப்பதும் அரக்கர்களைக் கொல்வதும் மட்டுமல்;ல, , மாறாக மானுடம் வென்றதம்மா என்று அறத்தை நிலை நாட்டி மானிட தர்மத்தைத் தூக்கி நிறுத்தி நிலைநாட்டுவதுதான் என அவர் முடித்த போது அவை, கைதட்டவும் மறந்து உரை தந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.
மாலை ஐந்து மணி அளவில், 'தமிழ்வாணி" என்ற தாளிகையின் நிறுவனரும் ஆசிரியரும் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கவிஞர் கோவிந்தசாமி செயராமன், 'கம்பன் விழாவிற்கு இராமனின் வருகை" என்ற தலைப்பில் கவிமலர் அளித்தார். தொடர்ந்து, திருவாரூரிலிருந்து வருகை தந்திருந்த நகைச்சுவைத் தென்றல் திருமிகு இரெ. சண்முகவடிவேல் அவர்களின் ஆய்வுரை தொடங்கியது. ஐயா அவர்களும் சிலமுறை இங்கே வந்து கம்பன் விழாவில் உரைகள் ஆற்றி அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இந்த முறை இவர்க்கு வாய்த்த தலைப்பு 'கற்பில் பொதுமை". கனமான இத்தலைப்பை இவர் எப்படிக் கையாளப் போகிறாரோ என்ற தவிப்பு அவையினருக்கு! இவருக்கோ இல்லை எந்த விதமான பதைப்பு! வந்து இவர் மைக்கைப் பிடித்த ஐந்தாவது நிமிடம் அவையினர் வயித்தைப் பிடித்துக்கொண்டனர்! குப், குப்பென இவர் நகைச் சுவை பாணங்கள் விட அவையினர்; குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழ நகைச் சுவை வெள்ளம் கரை புரண்டோடியது. நகையும் சுவையுமாக உரை நடந்தாலும் தலைப்பை விட்டுவிடவில்லை. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல, ஆணுக்கும் அதே அளவுக்குத் தேவையானதுதான் என்பதை அழகாக வலியுறுத்தினார். புதுமைப் பித்தனின் 'அகலிகை" என்ற சிறு கதை இக்கருத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது என்பதையும் விளக்கினார். சாப விமோசனம் பெற்ற அகலிகையை அழைத்துக் கொண்டு போய்க் கவுதம முனிவரிடம் சேர்த்து,'நெஞ்சிலால் பிழைப்பிலாளை நீ ஏற்றுக்கொள்ளுதி" என இராமன் வேண்டுகிறான். முனிவரும் ஏற்றுக்கொள்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின், சீதையைத் தீக்குளிக்க வைத்தான் இராமன் எனக் கேள்விப்பட்ட அகலிகை வாழ்வை வெறுத்து மறுபடி கல்லாகிவிடுகிறாள். கற்பில் பொதுமை வேண்டும் என்ற கருத்தைப் புதுமைப் பித்தன் தன் கோணத்தில் கூறி இருப்பதைச் சொல்லித் தன் உரையை முடிவு செய்தார் நகைச்சுவைத் தென்றல.;
தாய்க் கழகமான புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் செயலர் திருமிகு தி முருகேசனார், பிரான்சுக் கம்பன் கழகக் காவலர்கள் 14 பேர்களுக்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். தொடர்ந்து பட்டிமன்றம் தொடர்வதற்கு முன், கவிதாயினி சிமோன் இராசேசுவரி, 'கம்பன் விழாவிற்குச் சடையப்ப வள்ளல் வருகை" என்ற தலைப்பில் தான் எழுதிய அகவற்பாவைப் படித்தார். கவிதாயினி சரோசா தேவராசு, 'கம்பன் விழாவிற்கு அனுமன் வருகை" என்ற தலைப்பில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பா எழுதி வழங்கினார். இவர்கள் இருவரும் இப்படி மரபுக் கவிதை எழுதிப் படிக்கக் காரணம் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன். மாதந்தோறும் தன் இல்லத்தில் யாப்பிலக்கண வகுப்பு இலவயமாகவே எடுத்து வருகிறார். பாடங்கேட்க வருபவர்க்கு அறுசுவை உணவும் கிடைக்கும் என்பது இன்னொரு சிறப்பு.
பின்னர், நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலனார் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. தலைப்பு : 'இராமனின் மிகப் பெரிய வெற்றியை நிலை நிறுத்தியது உற்ற உறவா? பெற்ற நட்பா?" உறவே என்ற அணிக்குத் தலைமை இலக்கியச் சுடர் திருமிகு த. இராமலிங்கம். இவர் தமிழகத்தின் புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், சென்னை உயர்நீதி மன்றத்தின் பெரும் வழக்குரைஞர். இவர் அணிக்கு அணி செய்தவர்கள் பெண்மணிகள் இருவர் : சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான திருமதி லூசியா லெபோ, சிறந்த நாவலாசிரியரும் பேச்சாளருமான திருமதி அருணா செல்வம். எதிரணியில், தலைமை ஏற்றவர் நகைச்சுவைத் தென்றல் திருமிகு இரெ. சண்முகவடிவேல். இவர்க்குப் பக்க பலமாக இருவர் அமர்ந்தனர். தமிழை முறையாகப் பயின்று எம்.ஓ.எல் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற திருமிகு செய. பாலகிருட்டினன் அவர்களுள் ஒருவர். மற்றவர், கம்பனில் மிகுந்த ஈடுபாடு உடைய பேச்சாளர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால். உற்ற உறவே பெரிதென அவர்களும் நட்பே வெற்றிக்கு உரியது என இவர்களும் பட்டி மன்றத்தில் தம் கருத்தகளைக் கொட்டி முடித்தனர். இருவர் பக்க வாதங்களை, விவாதங்களை அழகாக அலசிய நடுவர் அழகான தீர்ப்பை வழங்கினார்.
'குகனொடும் ஐவர் ஆனொம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்" என இராமன் வீடணனிடம் கூறுவதை எடுத்துக் கூறிப் பெற்ற நட்பையும் உற்ற உறவாக ஆக்கிக் கொண்டவன் இராமன் என்று தீர்ப்பு கூறியதோடு நில்லாமல் மேற்கொண்டு அருமையான கருத்து ஒன்றையும் எடுத்துரைத்தார். எல்லாரையும் தன் உறவாகக் கொண்டுவிட்ட இராமன், அனுமனை மட்டும் தன் உறவாகவோ நட்பாகவோ கருதவில்லை! இறுதியில் மணிமுடி சூடிய இராமன் ஒவ்வொருவருக்கும் பரிசுகள் வழங்குகிறான். அப்போது, அனுமனை மகிழ்வுடன் இனிதாகப் பார்த்து, 'நீ அன்று செய்த பெரிய உதவிக்கு யான் செய்யும் கைம்மாறான செயல் வேறொன்றில்லை. எனவே, 'போர் உதவிய திண்தோளாய் பொருந்துறப் புல்லுக என்றான்".
பெரியவர்கள்தாம் சிறியவர்களைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும.; இது மரபு. தன்னை விட அனுமன் பெரியவன் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறான் இராமன். அதனால்தான், 'அனுமா, என்னை மார்புறத் தழுவிக்கொள்" என அழைப்பு விடுக்கிறான் இராமன். இதற்கு அனுமன் பதில் என்ன? உடனே நாணம் கொண்டு தலை வணங்கி , வாய் பொத்தி, விளங்கும் படையின் முன்புறத்தில் ஒதுங்கிக் கிடந்தானாம் வன்மையுள்ள அந்த அனுமன்! இதற்கு விளக்கம் கூற வந்த முனைவர் சத்தியசீலனார், இராமன் வேறு அனுமன் வேறு அல்லர். இருவரும் ஒருவரே! ஒரே பரமாத்துமாவே! அப்படி இருக்க அனுமன் எப்படி இராமனைத் தழுவ முடியும்! இதைக் கூட அறியாதவனாக இராமன் இருக்கிறானே என்று அனுமன் நகைத்து வாய்புதைத்து நிற்கிறானாம். ஆக அங்கே பரமாத்வாவும் சீவாத்துமாவும் ஒன்றாகி நிற்கின்ற அத்வைத நிலையை விளக்கித் தம் நடுவர் உரையை நிறைவு செய்தார் நாவுக்கரசர். நல்ல நிகழ்வுகளைக் கண்ட நிறைவிலும் அரிய உரைகளைச் செவிமடுத்த மகிழ்விலும் மக்கள் கலைந்தனர், மறு நாள் பொழுது விரைவில் புலராதா என்ற ஆவலுடன்.
கம்பன் விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வுகளைக் காண வருவதைப் போல் காலைக் கதிரவன் மேகங்கள் புடைசூழப் பவனி வந்தான். கம்பன் கழக உறுப்பினர்களான திருமதி, திரு அசோகன் இணையர் மங்கல விளக்குகளுக்கு ஒளி ஊட்ட, கம்பன் வாழ்த்தோடு விழா தொடங்கியது. கடவுள் வாழத்து, தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டையும் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் பாடினார். ஆசிரியை திருமதி குமுதினி வேலாயுதம் அலைபாயுதே கண்ணா என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் பேரா. பெஞ்சமின் லெபோ, 'சடையப்ப வள்ளலின் மறு பிறப்பாய்ச் சலியாது வாரி வழங்கும் வள்ளலே, சப்தகிரி குழுமத்தின் தலைமை அண்ணலே புதுவை புகழ் திருமிகு பொ. சிவக்கொழுந்து ஐயா அவர்களே வருக வருக வருகவே!" என வரவேற்றுத் தலைமைதாங்க வருமாறு அவரை அழைத்தார். (சும்மாவா, பின்னே முன் தினம் கம்பன் விழாவுக்கு 250 யூரோ நன்கொடை வழங்கிய வள்ளல் அல்லவா அவர்!). பிறகு, துள்ளல் ஓசை மிகுந்த கவிதை நடையில் பேராசிரியர் அனைவரையும் வரவேற்றார். பின் திருமிகு சிவக்கொழுந்து கம்பன் கழகத்தைப் பாராட்டிப் பேசத் தலைமை உரை நிறைவுற்றது. காய்ச் சீர்கள் நான்கு அமைத்துப் பின் மாச்சீரும் இறுதியில் தேமாவும் வரும்படி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியப் பாவில் வாழ்த்துக் கவிதை வழங்கினார் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு தேவராசு. கவிஞர் கி பாரதிதாசனின் யாப்பு வகுப்பில் பாடங்கேட்டு வருபவர் இவர். அவரைத் தொடர்ந்து திருமிகு தங்க சிவராசன் தொடக்க உரை நிகழ்த்தினார். இவர் புதுச்சசேரிக் கல்வித்துறையில் மேனிலைப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றவர், புதுச்சேரிக்குப் புகழ் சேர்த்து வரும் எழுத்தாளர்களில் முன் நிற்பவர். கம்பனை ஆங்கிலப் புலவர்கள் பலரோடு ஒப்பிட்டுக் கம்பனின் சிறப்புகளைச் சுருக்கமாக ஆனால் நறுக்காக எடுத்துரைத்தார் இவர்.
அடுத்த அமர்வில் கவிதாயினி திருமதி பூங்குழலி பெருமாள், 'கம்பன் விழாவிற்குக் குகன் வருகை" என்ற தலைப்பில் அருமையான கவிதை ஒன்றைப் படித்ததோடு சில இடங்களில் தன் இனிய குரலில் பாடியும் காட்ட, அவையினர் பெரிதும் ரசித்துக் கைதட்டிப் பாராட்டினர். ஈழத்துக் கவிதாயினி திருமதி லினோதினி சண்முகநாதன், 'கம்பன் விழாவிற்கக் கும்பகருணன் வருகை" என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். இவர் கவிதையில் ஈழத் தமிழர்களின் சோகம் இழையோடியது, கேட்டோர் கண்களில் மழையோடியது! இதன் பின் தேனுரை அளிக்க, இலக்கியச் சுடர் தரும் காலை இளங் கதிராய், மாலையிலே வலம் வரும் தமிழ் நிலவாய், கம்ப கண்ணதாசப் பெருமைகளை எல்லாம் மேடையிலே பேசுகின்ற மெல்லிய பூங்காற்றாய் நீதியை நிலைநாட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தின் உச்சி விளக்காய் விளங்கும் மெச்சு புகழ் இலக்கியச் சுடர் திருமிகு த. இராமலிங்கம் வந்தார். 'காதல் - கம்பன் பார்வையும் கண்ணதாசன் பார்வையும்" என்ற தலைப்பில் மிக அருமையான, சுவையான விருந்து தந்தார்! காதலிக்க வாய்ப்பில்லாத கம்பன் கற்பனையில் தான் கண்ட காதலைப் பாடினான், கண்ணதாசனோ தான் பெற்ற அனுபவங்களையே தன் காதல் பாடல்களில் பொதிந்து வைத்துவிட்டான் என்பதை அழகுற விளக்கினார். மேலும் கம்பனின் கருத்துகளை மிக இலாவகமாகக் கையாண்ட கண்ணதாசன் அவற்றைத் தன் பாடல்களிலும் பொதிந்து வைத்த பாங்கினை எடுத்துக் காட்டினார். மதிய உணவு நேரம் தாண்டிய போதும் மக்கள் இவர் உரையின் ருசியிலேயே கட்டுண்டு இருந்தனர்.
மதிய உணவுக்குப் பின், இராமகிருட்டினாலயம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பெண்களும் சிறுவர் சிறுமிகளும் இராமநாமாவளி பாடினர், பின் இரகுபதி இராகவ ராஜாராம், வேறு சில இராம பக்திப் பாடல்களைப் பாடினர். பிறகு, ஈழத்தமிழ்க் கவிதாயினி எழில் துசியந்தி'கம்பன் விழாவிற்குச் சூர்ப்பணகை வருகை' என்ற தலைப்பில் கவிதை படித்தார். 'கம்பன் விழாவிற்குத் தசரதன் வருகை" என்ற கவிதையைப் படித்தவர் பாரிசு பார்த்தசாரதி.
தொடர்ந்து, சுழலும் சொற்போர் தொடங்கியது. நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலனார் தலைமை தாங்கினார். கம்பனில் சிறந்த திருப்பு முனை கூனியின் கோபமே என்ற அடித்துப் பேசி வாதிட்டார் பேராசிரியர் சக்திப்புயல். இல்லை ,இல்லை, மாரீசனின் சூழ்ச்சிதான் என்று வழக்கரைஞருக்கே உரிய வாதத் திறமையோடு தன் கருத்தை நிலைநாட்டினார் இலக்கியச் சுடர் த. இராமலிங்கம். சூர்ப்பணகையின் காமம்தான் கம்பனில் சிறந்த திருப்பு முனையாக அமைய முடியும் என்பதைத் தனக்கே உரிய நகைச்சுவையோடு எடுத்துரைத்தார் நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல். இறுதியாகப் பேசவந்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, கோபம், சூழ்ச்சி, காமம் முதலியன எதிர்மறை திருப்புமுனைகளை விளைவித்தன, வீடணனின் அறம்மட்டுமே ஆக்கபூர்வமான திருப்புமுனையைத் தந்து காவியத்தை முடிக்க உதவியது என்று ஆணித்தரமாக வாதிட்டார். நால்வரின் வாதங்களையும் நல்லபடி அலசி ஆராய்ந்த நடுவர், வீடணனின் அறம் அவனுக்கு மட்டும் பயன்பட்டது, கூனியின் கோபம் கதையைத் திசை திருப்புவதோடு நின்று விடுகிறது, மாரீசனின் சூழ்ச்சியைச் சிறப்புத் திருப்பு முனையாகக் கருத இடமே இல்லை என்று மூன்றையும் புறந்தள்ளினார். மிஞ்சி இருப்பது, சூர்ப்பணகையின் காமம். இவளின் காமம்தான் கதையின் முக்கிய திருப்புமுனையாகவும் அரக்கர் குலமே அழியும் அளவுக்கு அழிவை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருப்பதால் இவளின் காமமே கம்பனில் சிறந்த திருப்பு முனையாக அமைகிறது எனத் தீர்ப்பு சொன்ன போது அவை கைதட்டி ஆரவாரித்து அந்தத் தீhப்புக்குத் தன் இசைவை அளித்தது.
அடுத்ததாகச் செல்வி அனு பாலகிருட்டிணன் நடனப் பாடல் பாடத் திருமதி சில்பா செந்தில் பாலகிருட்டிணன் அருமையான பரத நாடடிய விருந்து அளித்தார். பின்பு, புதுச்சேரி அன்பர் திருமிகு குணவதி மைந்தன் என்னும் இரவி இயக்கித் தயாரித்த 'கவிச்சக்கரவர்த்தி கம்பர்" குறும்படம் திரையிடப்பட்டது. மிகச் சிறப்பான கதை அமைப்பும் இனிய இசையும் அருமையான இயக்கமும் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. விழாவிற்கு வந்திருந்த இயக்குநர் இரவியை மக்கள் சூழுந்துகொண்டு பாராட்டு மழை பொழிந்தனர். சலுகை விலையில் (10 யூரோக்கள் மட்டுமே) தரப்பட்ட அக்குறும்படத் தகடுகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்க எல்லாத் தகடுகளும் விரைவில் விற்றுத் தீர்ந்தன! இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பட்டயம், விருது வழங்கு விழாவில் குறும்படத் தயாரிப்பாளர், இயக்குநர் திருமிகு குணவதி மைந்தன் என்னும் இரவிக்கு கம்பன் திருப்பணி விருது வழங்கப்பட்டது. பிரான்சுக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் வழங்கும் பட்டயங்கள், விருதுகளை இந்த ஆண்டு அறுவர் பெற்றனர். அவர்கள் சார்பில் ஏற்புரையைக் கவிதையிலேயே வழங்கினார் புலவர் கலியபெருமாள் (இவர் புதுவைக் கவிஞர் வாணிதாசனாரின் மருமகன்).
இறுதி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. நடுவராக நாவுக்கரசர் முனைவர் சோ. சத்தியசீலனார் அமர, இலக்கியச் செல்வர் த. இராமலிங்கம் சமூகத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். 'பாரதியின் சிந்தனைகளை நடைமுறைப் படுத்தாத சமூகம் குற்றம் உடையது" என அவர் குற்றப் பத்திரிகை படிக்க நகைச்சுவைத் தென்றல் அவற்றை எல்லாம் நகையோடும் சுவையோடும் மறுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர், இக்காலச் சமூகம் பாரதியின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்த முயன்று வருவதைப் பல கோணங்களில் எடுத்துக்காட்டி வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.
ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் அதில் கலந்துகொண்டவர்களுக்குத் துண்டு போர்த்தப்பட்டுப் பரிசுப் பொருள்களாக நூல்கள் வழங்கப்பட்டன. விழா நிறைவுக்கு முன்னதாகக் கம்பக் காவலரும் பிரான்சுக் கம்பன் கழக உறுப்பினருமான செவாலியே யூபர்ட் சிமோன் அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி கூறினார்.
அவை கலையும் முன், முனைவர் சோ. சத்தியசீலனார் தங்களை வரவழைத்து விருந்தோம்பிய கவிஞர் கி. பாரதிதாசனார்க்கும் அவர் துணைவியார் திருமதி குணா பாரதிதாசனுக்கும் நன்றி சொன்னார். இந்தியக் கம்பன் கழகங்கள் எதுவும் செய்யாத சில நல்ல பணிகளை - கம்ப இராமாயணம் முற்றோதுதல், யாப்பிலக்கண வகுப்பு, கம்பன் விழாவில் பாரதி போன்ற பிற கவிஞர் படைப்புகளைப் பற்றிய அலசல் - பிரான்சுக் கம்பன் கழகம் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிக் கவிஞர் பாரதிதாசனுக்கும் அவருக்கு உதவியாக இருந்து செயற்படும் கழக உறுப்பினர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இ;றுதியாக, வள்ளுவனை நம் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவர் உரையினை நிறைவு செய்ய, விழா நிகழ்ச்சிகளைத் தொய்வு இல்லாமல் நடத்திச் சென்று சுவையாகத் தொகுத்து அடுக்கு மொழிகளில் மிடுக்காக அளித்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, வள்ளுவனைத் தள்ளி வைத்து வாழ்க்கை நடத்த இயலாது! 'உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்" என அந்த வள்ளுவன் சொன்னது போல அடுத்த ஆண்டும் உவப்பத் தலைகூடுவோம்' என்று முத்தாய்ப்பாய்க் கூறி விழாவினை நிறைவு செய்தார்.
- வருணனை : புதுவை எழில் (பிரான்சு)
- படங்களை வழங்கிய அன்பர்களுக்கு நன்றிகள்
- 31 படங்களையம் காண ,ங்கே கொடுக்கவும் :
http://picasaweb.google.fr/benjaminlebeau/Kamban2008PhotosForMagazines#
No comments:
Post a Comment